கல் குவாரியில் பாறை விழுந்து தொழிலாளி பலி
கோலார்: கல் குவாரியில் பாறையை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பாறை விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்தனர்.கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின், மாகாரஹள்ளி கிராமத்தில் கல் குவாரி உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களின் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேற்று மதியம் வெடிவைத்து, பாறையை தகர்க்க தயாராகி வந்தனர்.அப்போது, திடீரென பாறை நழுவி விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ், 60, என்ற தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஹரிஷ், ஈஸ்வர் ஆகிய இரு தொழிலாளர்கள் காயமடைந்து கோலாரின் ஜாலப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தகவலறிந்த சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறை அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். சம்பவம் எப்படி நடந்தது என்பது பற்றி, விசாரித்தனர். மாஸ்தி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.