உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமானம் நொறுங்கியதில் இறந்த தாய், 2 வயது மகளை தேடி அலையும் தொழிலாளி

விமானம் நொறுங்கியதில் இறந்த தாய், 2 வயது மகளை தேடி அலையும் தொழிலாளி

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் விமானம் நொறுங்கி விழுந்த மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த தாயார் மற்றும் 2 வயது மகளின் உடல்களை தொழிலாளி ஒருவர் கண்ணீருடன் தேடி வருகிறார்.குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து, பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட , 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானம், ஒரு நிமிடத்திற்குள்ளே, கீழே விழுந்து வெடித்தது. 600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் ஒரேயொரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தது, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டு மொத்தமாக 265 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், விமானம் நொறுங்கி விழுந்ததால் மருத்துவ கல்லூரி விடுதி இடிந்து பலத்த சேதம் அடைந்தது. அதில், பல பேரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில், மருத்துவக் கல்லூரி கேண்டினில் உணவு தயாரித்து கொடுக்கும் பெண், அவரது 2 வயது பேத்தி ஆகியோரும் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். அவர்களின் உடலை அடையாளம் காண முடியாமல் பெண்ணின் மகன் தவித்து வருகிறார்.

டிஎன்ஏ சோதனை

இது தொடர்பாக ரவி என்ற அந்த நபர் கூறியதாவது: நேற்று வழக்கம் போல் எங்களது பணிகளில் ஈடுபட்டோம். ஆனால், அன்றைய நாள் இயல்பானதாக இல்லை. 1 மணியளவில் மருத்துவமனை ஊழியர்களுக்கு உணவு கொடுக்க சென்று விட்டேன். திரும்பி வந்து பார்த்த போது, விமான விபத்து நடந்தது தெரியவந்தது. அங்கு தான் எனது தாயார் ஷரளா பென் தாக்கூரும், மகள் ஆதியாவும் இருந்தனர். எனது டிஎன்ஏ பரிசோதனையை கொடுத்து விட்டேன். அதன் மூலம் எனது மகள் உடலை அடையாளம் காண முடியும் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

தெரியாது

ரவியின் சகோதரி பாயல் கூறியதாவது: விடுதிக்கு சென்ற தாயார் திரும்பவேயில்லை எனது உறவினரும் உடன் இருந்தார். நேற்று முதல் தேடி வருகிறோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. இன்னும் 72 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என சொல்கின்றனர். ஒவ்வொரு இடமாக அலைந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றார்.

நடந்தது என்ன - மாணவர் பேட்டி

மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் அருண் பிரசாந்த் கூறியதாவது: நேற்று 5வது மாடியில் மதியம் 1:30 மணியளவில் உணவருந்தி கொண்டு இருந்தோம். திடீரென புகை மூட்டமாக காணப்பட்டது. என்ன செய்வது என தெரியவில்லை. எங்களை புகை சூழ்ந்ததால், நாங்கள் ஓடினோம். நான் முதல் மாடிக்கு வந்து அங்கிருந்து கீழே குதித்து தப்பினேன். விபத்து நடந்த போது சிலர் அந்த கட்டடத்தில் இருந்தனர். வெளியில் வந்த பிறகு தான் விமான விபத்து நடந்தது தெரியவந்தது. 15- 20 நிமிடங்களில் மீட்புப்படையினர் வந்தனர் என்றார்.

ஊழியர்கள் சொல்வது என்ன

விடுதி ஊழியர்கள் சிலர் கூறியதாவது: உயிரை காப்பாற்றிக் கொள்ள வெளியில் ஓடினோம். ரொட்டி தயாரித்து கொண்டு இருந்த போது விபத்து நடந்தது. 4 குழந்தைகள் இறந்தனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும், 2 வயது குழந்தையும் காணவில்லை.விமானம் நொறுங்கிய போது வெடிகுண்டு வெடித்தது போல் தெரிந்தது. விமானம் விழுந்ததாக தெரிவித்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

aaruthirumalai
ஜூன் 14, 2025 12:52

மிகப்பெரிய சோகமான நிகழ்வு. 15 முதல் 20 நிமிடங்களில் மீட்புபடை வந்தது சிறப்பு. எந்த பணியாளரின் அலட்சியமோ இவ்வளவு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.


ஆனந்த்
ஜூன் 13, 2025 21:47

நிரந்தரம் இல்லாத வாழ்க்கை. பணக்காரர்கள், ஏழைகள் என பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


ஷாலினி
ஜூன் 13, 2025 21:46

இது போல் எத்தனை சோகங்கள் உள்ளனவோ தெரியவில்லை.


சமீபத்திய செய்தி