2ம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு லோக்சபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடக்கும். 2026 ஏப்., - செப்., வரை முதல் கட்ட கணக்கெடுப்பு நடக்கும். இது, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் வசதிக்கு ஏற்ப, 30 நாட்களுக்குள் நடத்தப்படும். இதில் வீடுகளின் பட்டியல் கணக்கெடுக்கப்படும். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இது, 2027 பிப்ரவரியில் நடக்கும். அப்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ''என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பில், மனித கடத்தல் தடுப்பு பிரிவு, சைபர் பயங்கர வாத தடுப்பு பிரிவு, நிதி நடவடிக்கை பணிக்குழு உட்பட பல்வேறு புதிய பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த அமைப்பில் இருந்த ஐ.எஸ்., புலனாய்வு ஆய்வுப் பிரிவின் நோக்கத்தை விரிவுபடுத்தி, அதன் பெயரை, பயங்கரவாத எதிர்ப்பு ஆய்வு பிரிவு என, மத்திய அரசு மாற்றி உள்ளது,'' என்றார். 811 நோயாளிகளுக்கு 1 டாக்டர் ராஜ்யசபாவில், மத்திய சுகாதார அமைச்சர் நட்டா பேசியதாவது: நாட்டில், 811 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற நிலை உள்ளது. நாடு முழுதும், 13.88 லட்சம் பதிவு செய்யப்பட்ட அலோபதி டாக்டர் களும், 7.52 லட்சம் ஆயுஷ் டாக்டர்களும் உள்ளனர். மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் இளநிலை, முதுநிலை படிப்புகளின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். வருகிறது 'பாரத் டாக்சி' லோக்சபாவில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: வர்த்தக வாகன டிரைவர்கள் தனியார் நிறுவனங்களை சார்ந்திருப்பதை தடுக்க, 'பாரத் டாக்சி' என்ற டாக்சி செயலியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த செயலி, சஹகர் டாக்சி கூட்டுறவு லிமிடெட் என்ற பல மாநில கூட்டுறவு சங்கத்தால் இயக்கப்படும். இதன் முக்கிய அம்சம், பூஜ்ய கமிஷன். இதனால் அனைத்து சவாரிகளின் முழு வருமானமும் டிரைவர்களுக்கே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.