மீண்டும் காங்.,கில் இணைந்தார் யோகேஸ்வர்: கட்சிக்கொடி கொடுத்து வரவேற்றார் சிவகுமார்
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் நேற்று மீண்டும் காங்கிரசில் இணைந்தார். அவரது முடிவை பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, பா.ஜ., சார்பில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் ஆசைப்பட்டார்.ஆனால் ம.ஜ.த., தலைவரும், மத்திய கனரக தொழில் அமைச்சருமான குமாரசாமிக்கு, சென்னப்பட்டணாவை பா.ஜ.,வுக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லை. மகன் நிகில் அல்லது மனைவி அனிதாவை களம் இறக்க அவர் ஆசைப்பட்டார்.ம.ஜ.த., சின்னத்தில் யோகேஸ்வர் போட்டியிடட்டும் என்று 'ஆபர்' கொடுத்தார். ஆனால் இதில் யோகேஸ்வருக்கு உடன்பாடு இல்லை. 'பி பார்ம்'
நேற்று முன்தினம் சென்னப்பட்டணா தொகுதி கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. பா.ஜ., தலைமை தனது பெயரை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், யோகேஸ்வர் இருந்தார். ஆனால் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் தனக்கு சீட் கிடைக்காது என்பதும், யோகேஸ்வருக்கு தெரிந்துவிட்டது.கர்நாடக பா.ஜ., தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு கர்நாடக சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களை சந்தித்தார். தேர்தலில் போட்டியிட 'பி பார்ம்' வாங்கிக் கொண்டார்.இந்நிலையில் யோகேஸ்வரை தொடர்பு கொண்டு, ராம்நகர், மாண்டியா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் பேசினர். தங்கள் கட்சிக்கு வாரும்படி அழைப்பு விடுத்தனர். நீண்ட நேரம் நடந்த பேச்சு வெற்றிகரமாக முடிந்தது. முதல்வரிடம் ஆசி
நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, துணை முதல்வர் சிவகுமார் வீட்டிற்கு யோகேஸ்வர் சென்றார். காங்கிரசில் இணைவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. பின், வீட்டில் இருந்து தனது காரில் யோகேஸ்வரை, சிவகுமார் அழைத்துச் சென்றார்.முதல்வரின் காவிரி இல்லத்திற்குச் சென்றனர். காங்கிரசில் இணைய யோகேஸ்வர் விருப்பம் தெரிவித்து, சித்தராமையா காலில் விழுந்து ஆசியும் பெற்றுள்ளார்.பின், முதல்வரின் இல்லத்தில் இருந்து யோகேஸ்வரை, குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு, சிவகுமார் அழைத்துச் சென்றார். அவரது முன்னிலையில் காங்கிரசில் யோகேஸ்வர் இணைந்தார். கட்சிக் கொடி கொடுத்து அவர் வரவேற்கப்பட்டார்.
காங்கிரஸ் ரத்தம்
யோகேஸ்வரின் இணைப்பு குறித்து சிவகுமார் அளித்த பேட்டி:யோகேஸ்வருக்கு அரசியலில் அடித்தளம் அமைத்து கொடுத்தது காங்கிரஸ் தான். என்னை சந்தித்து, காங்கிரசில் இணைய வேண்டும் என்று கூறினார். இதுபற்றி முதல்வரிடம் விவாதித்தேன். அவரும் ஒப்புக்கொண்டார். பின், அவரை கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டோம்.யோகேஸ்வர் உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேர்ந்தார்.நானும், சுரேஷும் உங்களுடன் இருக்கிறோம். உங்களை நல்ல முறையில் நடத்துவோம் என்று யோகேஸ்வருக்கு உறுதி அளித்துள்ளேன்.சென்னப்பட்டணா காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பு சுரேஷுடம் உள்ளது. அவர் இன்று (நேற்று) இரவு, கட்சி மேலிடத்திற்கு வேட்பாளர் பற்றி தகவல் அனுப்புவார். லோக்சபா தேர்தலில் சுரேஷ் தோற்றதற்கு யோகேஸ்வரும் காரணம். அரசியலில் இது நடப்பது சகஜம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி
யோகேஸ்வர் அளித்த பேட்டியில், ''எனது அரசியல் வாழ்க்கையை சிவகுமார் தலைமையில் துவங்கினேன். காங்கிரசை விட்டு வெளியேறினேன். இப்போது மீண்டும் வந்துள்ளேன். மீதம் உள்ள அரசியல் பயணம் காங்கிரசில் தான். சில நேரங்களில் நாம் கட்டிய வீட்டில் நம்மால் வசிக்க முடியாது. எனக்கும் அதே நிலை தான். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் எனக்கு நல்ல சூழல் இல்லை என்பதை உணர்ந்து, காங்கிரசுக்கு வந்துள்ளேன். நான், சிவகுமார், சுரேஷ் மூன்று பேரும், பல ஆண்டுகளாக அரசியலில் உள்ளோம். சுரேஷ் வெற்றிக்கு ஒரு முறையும், தோல்விக்கு ஒரு முறையும் நான் காரணமாகி இருக்கிறேன். வரும் நாட்களில் சுரேஷ் வெற்றிக்காக உழைப்பேன்,'' கூறினார்.
கூண்டில் சிக்கிய சிறுத்தை
எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:காங்கிரசில் இணைவதற்கு பதிலாக, ம.ஜ.த., வேட்பாளராக யோகேஸ்வர் போட்டியிட்டு இருக்கலாம். அவர் அசல் பா.ஜ.,க்காரர் இல்லை. சித்தாந்தம் அடிப்படையில் எங்கள் கட்சியில் இல்லை. பல கட்சி மாறியவர். எங்கள் பேச்சை கேட்காமல் காங்கிரசில் இணைந்துள்ளார். அரசியல் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டார்.ராம்நகர் அரசியலில் யோகேஸ்வரை, சிவகுமாரும், சுரேஷும் வளர விட மாட்டார்கள். சென்னப்பட்டணாவில் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார். லட்சுமண் சவதி காங்கிரசுக்கு சென்றார். அவர் அமைச்சர் ஆனாரா?காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததில் எனது பங்கும் உண்டு என்று யோகேஸ்வர் முன்பு கூறினார். அவர் ஒருவரால் பா.ஜ., ஆட்சிக்கு வரவில்லை. அவருக்கு விசுவாசமே கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத், யோகேஸ்வரை மோசடிக்காரர் என்று விமர்சித்துள்ளார். சிவகுமார் என்ற கூண்டிற்குள், யோகேஸ்வர் என்ற சிறுத்தை சிக்கியதாக, பா.ஜ., - எம்.எல்.சி., ரவி விமர்சித்துள்ளார். இன்னும் பல தலைவர்களும், யோகேஸ்வரை திட்டித் தீர்க்கின்றனர்.