வீடு வீடாக சென்று வாக்காளரை சந்திக்கிறது இளைஞர் காங்கிரஸ்
புதுடில்லி:வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் துவக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இருந்து, வாக்காளர்களை நீக்கி வருவதாக காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் உதய் பானு சிப், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பிரசாரத்தை துவக்கி வைத்தார். இதுகுறித்து உதய் பானு சிப் கூறியதாவது: இது, ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். ஜம்மு வடக்கு சட்டசபை தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் காணும் பிரசார இயக்கத்தை துவக்கி வைத்தேன். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுதும் இந்தப் பணியில் ஈடுபடுவர். வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் மோசடிகளை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.