இனி பிரிட்டன் வேலைக்கு ஐ.இ.எல்.டி.எஸ்., கட்டாயம் தேவை
உலகெங்குமுள்ள 6 ஆயிரம் நிறுவனங்கள் ஆங்கில மொழித் திறனறியும் தேர்வாக இதை ஏற்றுக்கொண்டுள்ளன. இத் தேர்வுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ் கவுன்சில், ஐ.டி.பி., ஐ.இ.எல்.டி.எஸ்., (ஆஸ்திரேலியா) ஆகியவை கூட்டாக நிர்வகிக்கின்றன. பிரிட்டனுக்கு பணிநிமித்தம் வரும் வெளிநாட்டினருக்கான தேவைகளை நிர்ணயிக்கும் யு.கே.பார்டர் ஏஜென்சியானது 5 அம்ச அடிப்படைத் தேவைகளை தற்போது நிர்ணயித்துள்ளது.இவற்றுள் 2வது அம்சத்தின் கீழ் குறிப்பிட்ட திறமைகள் தேவைப்படும் பணிகளுக்காக அங்கு வரும் திறமை வாய்ந்த பணியாளர்களை அனுமதிக்கிறது. ஆசிரியப் பணி, பொறியியல் போன்ற பணிகளுக்காக பிரிட்டனுக்கு செல்பவருக்கு இது கட்டாயத் தேவையாக மாறுகிறது.இத்தகைய திறன் அடிப்படையிலான வேலைக்குச் செல்பவரின் ஆங்கிலத் திறமை குறித்த தேவைகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுகளை ஏற்கனவே டயர் ஒன்று பணிகள் என அழைக்கப்படும் வக்கீல், முதலீட்டாளர் போன்றோருக்கும் தேவைஎன கூறி வரும் பிரிட்டிஷ் அரசு தற்போது டயர் 2 பணிகளுக்கும் இதை கட்டாயமாக்கியுள்ளது.நல்ல ஆங்கிலத் திறன் உள்ளவர்கள் மட்டுமே ஐரோப்பிய வேலைச் சந்தையில் கலந்துறவாடி பணி புரிய முடியும் என்பதோடு பிரிட்டனுடன் ஒருங்கிணைய முடியும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. ஐ.இ.எல்.டி.எஸ்., முறையானது சர்வதேச ஆங்கில அறிவுத் திறனை வெளிக்கொணருவதற்கான சிறந்த கருவியாக விளங்குவதால் பிரிட்டிஷ் அரசின் இந்த முடிவை ஐ.இ.எல்.டி.எஸ்., அமைப்பும் இதை வரவேற்றுள்ளது.