உள்ளூர் செய்திகள்

புத்தாக்கமே பிரதானம்

கோவை கொடிசியா அரங்கில் சர்வதேச அளவிலான இரண்டுநாள் புத்தொழில் மாநாடு சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தமிழகத்தில் சர்வதேச அளவிலான புத்தொழில் மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல்முறை. புதியதாக தொழில் துவங்க விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு உலக நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது. பண பலம் படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு நேரடியாக சென்று முதலீட்டாளர்களை சந்தித்து, தொழில் 'ஐடியா'க்களுக்கு முதலீட்டை பெற முடியும். அத்தகைய வாய்ப்பை பெற இயலாத, திறமைமிக்க புத்தொழில் ஆர்வலர்களுக்கு சர்வதேச அளவிலான தொடர்பை இம்மாநாடு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.இம்மாநாட்டில் 40 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள நிலையில், சர்வதேச அளவில் பிற நாடுகளிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, உண்மையில் நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று. எங்களது கடும் முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொழில்முனைவோர்களிடம் உள்ள தேடல்களுக்கு சரியான விடை காணும் இடமாக, இம்மாநாடு அமைந்துள்ளது.மாற்றம்மாற்றத்திற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக்கொள்வது என்பது மிகவும் அவசியம். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.டி., துறையின் வளர்ச்சி காரணமாக, பெரும்பாலானோர் அது சார்ந்த படிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் தொழிலில் ஆர்வம் செலுத்தினர். தற்போது ஏ.ஐ., வருகைக்கு பிறகு ஐ.டி., துறை வேலை வாய்ப்புகள் கேள்விக்குறியாகி உள்ளன. நூறு பேரின் பணியை ஏ.ஐ., தெரிந்த இரண்டு பேர் செய்துவிட முடியும் என்கிற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். இவ்வாறு மாற்றம் நிகழும் சூழலில், 'இன்னோவேஷன்' பிரதான இடத்தை பிடிக்கும் காலகட்டத்தை நாம் தற்போது அடைந்துள்ளோம். முன்பு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்த காலகட்டத்தில் இருந்தன. தற்போது, புத்தாக்கத்தை நோக்கிய தொழில் முயற்சியில் ஈடுபடக்கூடிய முக்கிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்ரிக்காவும் இத்தகைய நிலையை அடையும்.ஆகவே, இன்றைய காலம் மற்றும் சூழலை இளைஞர்கள் வலுவாக பிடித்துக்கொண்டு முன்னேற வேண்டும். அதற்குரிய வாய்ப்புகளை அரசாங்கங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அத்தகைய பணியைத் தான் தற்போது தமிழக அரசு இதுபோன்ற சர்வதேச அளவிலான புத்தொழில் மாநாடுகளின் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. எதிர்கால திட்டங்கள்இனிவரும் காலங்களில், பெங்களூரு போன்று முதலீடு தமிழகத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை போக்கும் வகையில் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளோம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், சிறு நகரங்களிலும் 'ஸ்டார்ட்-அப்'கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. குறைந்தது 100 கிராமங்களிலாவது ஸ்டார்ட்-அப் உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளோம். ஒருபுறம் மிகவும் உயர்திறன் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே தருணம் விளிம்புநிலை மக்களுக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க உள்ளோம்.-சிவராஜா ராமநாதன், சி.இ.ஒ., ஸ்டார்-அப் தமிழ்நாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !