உள்ளூர் செய்திகள்

உயர்வு தரும் சாப்ட் ஸ்கில்ஸ்

இந்த 21ம் நூற்றாண்டில் தேவைப்படும் பிரதான திறன்களாக 'சாப்ட் ஸ்கில்ஸ்'அதிகளவில் பலராலும் உச்சரிக்கப்படுகிறது. இந்த திறன்கள், பணி இடம் மற்றும் தொழில்களில் வெற்றி பெருவதற்கு மட்டுமின்றி, தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவசியமாகிறது.இங்கே சில முக்கிய 'சாப்ட் ஸ்கில்ஸ்'களை பார்க்கலாம்:தொடர்பு திறன்: வாய்மொழியாகவும், எழுத்து மூலமாகவும் தகவல்களை திறம்பட தெரிவிக்கும் திறன். இதில் கவனித்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் கருத்துக்களை தெளிவாக விளக்குதல் ஆகியவை அவசியமாகிறது.குழுவாக பணிபுரிதல்: பணி இடத்தில் அல்லது எந்த சூழலிலும் குழுவாக மற்றவர்களுடன் திறம்பட செயல்படும் திறன். குழு உறுப்பினர்களின் செயல்பாடுகளை புரிந்துகொள்ளுதல் மற்றும் அவர்களின் முயற்சிகளில் பங்கெடுத்தல் அவசியம். ஒத்துழைத்தல் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவையும் இதில் அடங்கும்.சிக்கலைத் தீர்க்கும் திறன்: சிக்கல்களைக் கண்டறிவது, விமர்சன ரீதியாக சிந்திப்பது மற்றும் பயனுள்ள தீர்வுகளைக் கொண்டு வருவது ஆகியவை இதில் அடங்கும். பகுப்பாய்வு சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் வளம் ஆகியவை இதற்கு தேவைப்படுகின்றன.நெகிழ்வுடன் செயல்படும் திறன்: புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளுதல், புதிய சூழல்கள் அல்லது சவால்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், மாற்றத்திற்கு ஏற்றவாறு நெகிழ்வுடன் செயல்படுதல் ஆகியவை அவசியமாகின்றன.தலைமைத்துவம்: ஒரு இலக்கை நோக்கி செயல்பட மற்றவர்களை ஊக்கப்படுத்துதல் மற்றும் வழிநடத்துதல். இதில் முடிவெடுத்தல், பணிகளை சரியானவர்களிடம் ஒப்படைத்தல், குழு உறுப்பினர்களை முறையாக ஊக்கப்படுத்துதல் மற்றும் திட்டங்களை நிர்வகித்தல் ஆகியவை அடங்கும்.உணர்ச்சி நுண்ணறிவு: தங்களது உணர்ச்சிகளை நிர்வகித்தல், அத்துடன் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்குரிய முறையில் புரியவைத்து செயல்பட வைத்தல் ஆகிய திறன்களை குறிக்கிறது. அனுதாபம், சுய விழிப்புணர்வு மற்றும் சமூக திறன்கள் இதில் உள்ளடங்கி உள்ளன.நேர மேலாண்மை: இலக்கிற்கு ஏற்ப திட்டமிடுதல், காலக்கெடுவுக்குள் பணிகளை திறம்பட ஒழுங்கமைத்து செயல்படுதல் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும். ராஜதந்திரம்: பேச்சுவார்த்தை மற்றும் உரிய நுட்பங்களின் வாயிலாக, கருத்து வேறுபாடுகளை ஆக்கபூர்வமான முறையில் எடுத்துரைத்தல் மற்றும் தீர்வு காணுதல்.பணி நெறிமுறை: அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை மற்றும் பணியில் நேர்மறையான அணுகுமுறையை வெளிப்படுத்துதல், நேரம் தவறாமை, பொறுப்புணர்ச்சி மற்றும் தரத்தில் உறுதியுடன் இருத்தில் ஆகியவை இதில் அடங்கும்.இத்தகைய 'சாப்ட் ஸ்கில்ஸ்' மேம்பட தொடர் பயிற்சி, விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வளர்ச்சியை நோக்கிய செயல்பாடு ஆகியவை அவசியமாகின்றன. -சதிஷ்குமார் வெங்கடாசலம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !