ஒளி கொடுக்கும் உன்னத துறை
கண்ணின் குறைபாடுகளை பரிசோதனை செய்வர் ஆப்டோமெட்ரிஸ்ட்(நவீன கண் பரிசோதனையாளர்) என்று அழைக்கப்படுகிறார். ஆப்டோமெட்ரி(கண் பரிசோதனை) எனும் வார்த்தையானது, கிரேக்க மூலத்திலிருந்து வந்த வார்த்தையாகும். ஆப்டிக்ஸ் என்பது ஒரு அறிவியலாகும். இந்த அறிவியலானது, மனித கண்களின் அமைப்பு, செயல்பாடு மற்றும் இயக்கம் பற்றி ஆராய்வதாகும். ஆப்டோமெட்ரிஸ்ட் என்பவர் ஒரு மருத்துவ நிபுணரே. கண் பராமரிப்பு மற்றும் பரிசோதனை போன்ற பணிகளில் ஈடுபட்டு, கண் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் மற்றும் பிறவகை மருந்துகளை பரிந்துரைப்பதன் மூலம் முக்கியப் பங்காற்றுகிறார். காடராக்ட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய அல்லது பிந்தைய பராமரிப்பை இவர்கள் வழங்குகிறார்கள். ஆப்டோமெட்ரிஸ்ட் என்பவர் ஒரு முழுமையான கண் மருத்துவர் அல்ல. சில சமயங்களில், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிறவகை நோய்களால் கண் பார்வை பாதிக்கப்படும்போது, அவற்றை சோதித்து, பிற கண் மருத்துவர்களை, நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள். இத்துறையில் நுழைவது எப்படி: ஒரு ஆப்டோமெட்ரிஸ்டாக ஒருவர் பயிற்சிபெற வேண்டுமெனில், அவர் கட்டாயம் ஆப்டோமெட்ரியில் இளநிலைப் படிப்பை(பி.ஆப்டோம்) முடித்திருக்க வேண்டும். இது 4 வருட படிப்பாகும். முதல் 3 வருடங்களுக்குப் பிறகு 4வது வருடம் முழுவதும் கிளீனிக்கல் அனுபவம் பெறும் பொருட்டு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படும். இப்படிப்பில் சேர ஒருவர் பள்ளி படிப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும் மற்றும் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தப் படிப்பில் சேரும் முன்பாக, EYECET என்ற பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வானது இத்துறையில் மாணவரின் அறிவு மற்றும் ஆர்வத்தை சோதிப்பதற்கான நடத்தப்படுகிறது. எய்ம்ஸ் உள்ளிட்ட பல மருத்துவ நிறுவனங்கள் இந்தப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வை நடத்துகின்றன. இத்தொழிலுக்கு தேவைப்படும் திறன்கள் ஆப்டோமெட்ரிஸ்ட்டாக விரும்புபவர்களுக்கு கைத்திறன், பொறுமை மற்றும் நம்பிக்கை போன்றவை இருக்க வேண்டும். இதைத்தவிர, நல்ல கண்பார்வை, மெக்கானிக்கல் திறன், அர்ப்பணிப்பு, சுய ஒழுக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் நோயாளிகளை நயமாக கையாளும் திறன் போன்றவை அவசியம். சிறந்த கணிப்புத் திறனும், கவனமும் இருக்க வேண்டும். வேலை வாய்ப்புகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆப்டோமெட்ரிஸ்ட்கள் நல்ல சம்பளம் பெறுவார்கள். தனியார் துறையை தேர்ந்தெடுப்பவர்கள் நல்ல சம்பளம் வேண்டும் என்று கேட்டுப் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கண் மருத்துவர்களுக்கு உதவி செய்தல் என்பதைத் தவிர்த்து, ஆப்டோமெட்ரிஸ்ட்களுக்கு பலவித பணி வாய்ப்புகள் உள்ளன. சில வருடங்கள் அனுபவம் பெற்றபிறகு, ஒருவர் சொந்தமாக தொழில்(ஆப்டிகல்ஸ்) நடத்தலாம். ஆப்டோமெட்ரி படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்று, பிஎச்.டி. முடித்த ஒருவர், எந்த மருத்துவக் கல்லூரியில் வேண்டுமானாலும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கண் என்பது மனித வாழ்வில் மிகமிக முக்கியமான அம்சம் என்பதால், இத்துறையானது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி உள்ளது. இதற்கு என்றுமே சரிவு கிடையாது. எனவே ஒருவருக்கு ஆர்வம் மட்டும் இருந்தால், இத்துறையை தேர்ந்தெடுக்க எந்த தயக்கமும் தேவையில்லை. வேலை வாய்ப்பு என்பதைத் தவிர்த்து, ஒருவரின் வாழ்வில் இருளைப் போக்கி, ஒளி கொடுக்கும் உன்னதப் பணி என்பதால் இத்தொழிலுக்கு ஒரு தனி மரியாதை உள்ளது. இந்தப் படிப்பை மேற்கொள்ள தமிழகத்தில், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவைத்தவிர இந்திய அளவில் ஏராளமான கல்வி நிறுவனங்களும் உள்ளன. நல்ல வருமானமும், திருப்தியும் கிடைக்கும் தொழில் என்பதால், இதற்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு.