வளமான மருத்துவமனை நிர்வாகத் துறை
இந்தியாவின் உள்நாட்டு மருத்துவத் துறையானது நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து உயர்தர மருத்துவ சேவைகளுக்கு இந்தியாவை நாடிவரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வெளிநாட்டு நோயாளிகளின் வருகையால் பலன் பெறுவதற்காகவே இன்று பல தனியார் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறு பெருகிவரும் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் பொருட்டு, பல மருத்துவமனை நிர்வாகிகள் தேவைப்படுகின்றனர். ஹெல்த் மேனேஸ்மென்ட் மற்றும் ஹெல்த் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இன்றைய நிலையில் மவுசு அதிகரித்துள்ளது. அக்கவுன்டிங், பைனான்ஸ், மார்க்கெடிங் மற்றும் மனிதவள மேலாண்மை போன்ற பலத் துறைகளை உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு உள்ளது. இதுமட்டுமின்றி, மருத்துவக் கொள்கை மேம்பாடு மற்றும் சேவை வழங்கல் சூழல்கள்(மருத்துவ அமைப்பு வடிவமைப்பு, மருத்துவக் கொள்கை பகுப்பாய்வு, ஆதாரங்கள் அடிப்படையில் முடிவெடுத்தல்) போன்றவை பற்றிய அறிவையும் வழங்குகிறது. படிப்புகள் மருத்துவ நிர்வாகத்தில் எம்.பி.ஏ, மருத்துவ சிகிச்சை(ஹெல்த்கேர்) நிர்வாகத்தில் எம்.பி.ஏ, மருத்துவமனை மற்றும் மருத்துவ சிகிச்சை நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமோ மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுநிலைப் படிப்பு போன்ற பலநிலைகளில் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகள் 2 வருடங்கள் கொண்ட முழுநேர படிப்புகளாகும். எய்ம்ஸ், புனேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி, மனிப்பாலின் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரி, டெல்லியிலுள்ள பேகல்டி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் போன்றவை இதுதொடர்பான படிப்புகளை வழங்கும் சில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள். இக்கல்வி நிறுவனங்களில் சான்றிதழ், டிப்ளமோ மற்றும் முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. தகுதிகள் மருத்துவ நிர்வாகத்தில் முதுநிலைப் படிப்பில் சேர வேண்டுமெனில், இளநிலையில், கலை, அறிவியல், வணிகம், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், பல்மருத்துவம், பார்மசி, விவசாயம் அல்லது வேறு ஏதேனும் புரொபஷனல் படிப்புகளை, ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முடித்திருக்க வேண்டும். இளநிலைப் படிப்பில் மருத்துவம் தொடர்பான படிப்புகளை முடித்தவர்களுக்கு, மற்ற பட்டதாரிகளைவிட கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஏனெனில் மருத்துவ நிர்வாகம் என்பது, பிற மருத்துவ படிப்புகளைப் படித்திருந்தாலும் தேவையான ஒன்றாக உள்ளது. பணிக்குரிய தகுதிகள் மருத்துவ நிர்வாகம் என்பது ஒரு மருத்துவ அறிவியலாக, அதேசமயம், தனது பணிச்சிறப்பிற்கு, தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்ததாக இருக்கிறது. ஒரு சிகிச்சையில், நோயாளியும், மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதைக் கண்காணிப்பதன் மூலமாக, நோயாளியின் முன்னேற்றம் தடைபடாமல் இருக்கும். ஒரு மருத்துவமனையில் அவசர மற்றும் நெருக்கடி நிலை எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். எனவே ஒரு மருத்துவமனை நிர்வாகி பதட்டமடையாமல், பொறுமையாக விஷயங்களைக் கையாண்டு, நல்ல தலைமைப் பண்புடன், சிறப்பாக செயல்படுபவராக இருக்க வேண்டும். பணி நேரங்கள் 10 முதல் 12 மணி நேரங்கள் வரை இருக்கும் மற்றும் பணியாளர்கள், வருடத்தின் எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் மருத்துவமனையில் இருக்க வேண்டும். வேலை வாய்ப்புகள் மருத்துவ நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவுடன், மருத்துவமனைகளில், மருத்துவமனை நிர்வாகி, மருத்துவசேவை(நர்சிங்) நிர்வாகி, மருத்துவ தகவல் மேலாளர், மருத்துவ அலுவலக மேலாளர்கள் மற்றும் பயிற்சி நிர்வாகிகள் போன்ற பணி வாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் பொறுப்புகள் கூடகூட, பதவியும் அதிகரிக்கும். ஒரு மருத்துவ மேலாளர், நாளடைவில், முதன்மை இயக்க அதிகாரியாக, ஒரு மருத்துவம் தொடர்பான நிறுவனத்தில், மருத்துவ அறக்கட்டளையில் மற்றும் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணிபுரிவார். சி.ஓ.ஓ. எனப்படும் இந்த முதன்மை இயக்க அதிகாரிதான், மருத்துவமனை நிர்வாகம், நோயாளிகளைப் பற்றிய விவரங்கள், வருமானம் மற்றும் ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கு பொறுப்பாகிறார். சம்பளம் ஆரம்ப நிலையில், ஒரு உதவி மருத்துவ மேற்பார்வையாளர் சம்பளமாக ரூ.40000 முதல் 50000 வரை பெறுகிறார். பின்னர் துணை மருத்துவ மேற்பார்வையாளர், ரூ.50000 முதல் 55000 வரை பெறுகிறார். பின்னர் மருத்துவ மேற்பார்வையாளர் என்ற நிலையில் மாதம் ரூ.1,00,000 வரை பெறுவார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள் நிர்வாக இயக்குநர் என்ற நிலையை அடைவீர்கள். இந்தப் பொறுப்பில் மாதம் ரூ.1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஊதியமாகப் பெறலாம். மருத்துவத்துறை நிபுணர்களாக இருந்து, மருத்துவ நிர்வாகத் துறைகளுக்கு வருபவர்கள், பழைய வருமானத்தை விட, சிறிதளவு கூடுதலான வருமானத்தை ஈட்டுவார்கள். எதிர்கால வாய்ப்புகள் மருத்துவத் தொழிலுக்கு மனிதஇனம் உள்ளவரை வீழ்ச்சியே கிடையாது. அடுத்தப் பத்தாண்டுகளில், இத்துறையில் 1 கோடியே 20 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்படுவார்கள் என்று தேசிய திறன் மேம்பாட்டுக் கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே மருத்துவ மேலாண்மை துறையில் ஆர்வமுள்ளவர்கள், இத்துறை சார்ந்த படிப்புகளில் இப்போதே சேர்வதற்கு தயாராகுங்கள். இப்படிப்புகளை மேற்கொள்வதற்கு, தேசிய அளவில் உள்ள சில முக்கிய கல்வி நிறுவனங்கள் Sree Balaji medical college - Chennai(www.sbmch.ac.in) Indian institute of social welfare and management - kolkatta(www.iiswbm.edu) Lucknow university - Lucknow(www.lkouniv.ac.in) Manipal university - Karnataka(www.manipal.edu) Mahatma Gandhi university - Kerala(www.sme.edu.in) Nizam institute of medical sciences - Hyderabad(www.nims.ap.nic.in)