தொலைநிலைக் கல்வி மாணவர்களும் சிறப்பாக சாதிக்கலாம்!
இக்னோவில்(IGNOU) தொலைநிலைக் கல்வி மூலம் அரசியல் அறிவியலில் முதுநிலைப் பட்டம் படித்து, சிவில் சர்வீஸ் தேர்வில், இந்திய அளவில் 7ம் இடம்பெற்ற, மராட்டிய மாநிலத்தின் நாக்பூரைச் சேர்ந்த கார்த்திக் குருநாதன் அளித்த பேட்டி கே - உங்களின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு பற்றி கூறுங்கள். சிவில் சர்வீஸ் தேர்வை நோக்கி உங்களைத் தூண்டியது எது? ப - நான் நாக்பூரின் பவன்சில் பத்தாம் வகுப்பை முடித்தேன். அதன்பிறகு, Services Preparatory Institute(தேசிய பாதுகாப்பு அகடமி போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் கல்வி நிறுவனம்) - ல் சேர்ந்தேன். மாநிலக் கல்வி முறையில், அங்கேயே 12ம் வகுப்பை முடித்தேன். அதன்பிறகு, பூனாவிலுள்ள பெர்குசன் கல்லூரியில் இளநிலை இயற்பியல்(ஹானர்ஸ்) முடித்தேன். எனக்கு ராணுவ விமானத்தில் விமானியாக வேண்டும் என்று ஆசை. தேசிய பாதுகாப்பு அகடமியின் தேர்வில் 6வது இடத்தைப் பெற்றேன். ஆனால், மருத்துவ சோதனை தேர்வில் தோல்வியடைந்து விட்டதால் எனது கனவுகள் அனைத்தும் கலைந்து விட்டன. பின்னர், இக்னோவில், தொலைநிலைக் கல்வி முறையில், அரசியல் அறிவியல் பாடத்தில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். கே - பெர்குசன் கல்லூரியில் படித்துவிட்டு, இக்னோவிற்கு போனதன் காரணம் என்ன? ப - நான் பெர்குசன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோதும், எனது லட்சியம் சிவில் சர்வீஸ் தேர்வாகத்தான் இருந்தது. எனவே, அதை நிறைவுசெய்யும் பொருட்டு, இக்னோவில் முதுநிலைப் படிப்பில் சேர்ந்தேன். இக்னோவின் பல தனிச்சிறப்பு வாய்ந்த அம்சங்கள், சிவில் சர்வீஸ் எழுதத் தூண்டும் மாணவர்களை அதன்பால் ஈர்க்கின்றன. கே - சிவில் சர்வீஸ் தேர்வில் நீங்கள் தேர்ந்தெடுத்தப் பாடங்கள் என்ன? மற்றும் உங்களின் முயற்சிகள் எவ்வாறு இருந்தன? ப - நான் எனது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேறி விட்டேன். பிரிலிமினரி தேர்வுக்கு அரசியல் அறிவியல் பாடத்தை தேர்வு செய்தேன். முக்கியத் தேர்வுக்கு, வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் ஆகிய பாடங்களைத் தேர்வு செய்தேன். குறிப்பிட்ட வியூக முறைகள் எதையும் நான் வகுக்கவில்லை. என்னால் எந்தளவு முடியுமோ, அந்தளவு சிறப்பாக படித்தேன். எனக்கு மிகவும் பிடித்தப் பாடங்களையே விருப்பப் பாடங்களாக தேர்வு செய்தேன். இதனால், படிப்பில் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை. கே - இக்னோவின் முதுநிலைப் படிப்பு உங்களுக்கு எவ்வாறு உதவியாக இருந்தது என்பதைப் பற்றி கூறுங்கள்? ஏதேனும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றீர்களா? ப - நான் எந்தப் பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. இக்னோவின் பாடக்குறிப்புகள் விரிவாக இருந்ததால், அரசியல் அறிவியலில் எனக்கு விரிவான அடித்தளம் அதன்மூலம் கிடைத்தது. இதனால் முக்கியத் தேர்விலும் நான் நல்ல மதிப்பெண் பெற்றேன். அரசியல் அறிவியல் பாடத்தில் 2 தாள்களிலும் மொத்தமாக 346 மதிப்பெண்கள் பெற்றேன். கே - சிவில் சர்வீஸ் எழுத விரும்பும் மாணவர்களுக்கு, தொலைநிலைக் கல்விமுறை சிறந்தது என்று நாங்கள் கருதலாமா? ப - கற்றல் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். நமது எதிர்கால லட்சியம், நமக்கு எந்தமாதிரியான முறை ஒத்துவரும் போன்றவற்றை ஆய்வுசெய்து, படித்தல் செயல்பாட்டை தொடங்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வெழுத விரும்புவர்கள் பலவிதமான பின்னணிகளிலிருந்து வருபவர்கள் என்பதால், ஏதோ ஒரு செயல்பாட்டை, சிறப்பான படித்தல் செயல்பாடு என்று வரையறை செய்வது கடினம். எனவே, அவரவருக்கு எது பொருந்துமோ, அந்த முறையில் செல்வது சிறந்தது. கே - இந்திய நிர்வாகப் பணிகளில் உங்களின் விருப்பம் என்ன? ப - எனது விருப்பம் இந்திய வெளிநாட்டுப் பணி. ஏனெனில், மிகவும் சிறிய வயதிலிருந்தே, ஒரு பிரதிநிதியாக, வெளிநாட்டில், எனது நாட்டின் பொருட்டு, என்றாவது ஒருநாள் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. கே - உங்களுக்கான உந்து சக்தி என்ன? ப - வெளிநாட்டிற்கான தூதராக ஆக வேண்டும் என்ற லட்சியம் முக்கிய உந்துதல். மேலும் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகள் அனைத்தும் ஒரு கோபமாக மாறி, திட்டமிட்டு, ஆழ்ந்து படிப்பதற்கான ஒரு ஆற்றலை எனக்கு வழங்கின. கே - உங்களின் பொழுதுபோக்கு? ப - படித்தல், கவிதை எழுதுதல், பயணம் செய்தல் மற்றும் வெளி நடவடிக்கைகள். கே - சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன? ப - நேர்மையாக இருக்க வேண்டும். உங்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணர்ந்து பயன்படுத்த வேண்டும். உங்களின் துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக்கும் ஒரே சக்தி கடின முயற்சி மட்டுமே.