உள்ளூர் செய்திகள்

தொலைநிலைக் கல்வியும், தொழில்நுட்பங்களும்

காலச்சூழலுக்கேற்ப கற்பித்தல் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவைகளாகி விட்டன. புதிய  தொழில்நுட்பங்களும், புதிய யுக்திகளும் கற்றலையும், கற்பித்தலையும் எளிமைப்படுத்தி இருக்கின்றன. நேரடிக்  கல்வியை ப் பெற இயலாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த தொலைதூரக் கல்வி முறை, தற்போது இன்னும்  செறிவடைந்திருக்கிறது. தொலைநிலைக் கல்வி முறையில் கலந்துரையாடல் ஒரு பிரச்னையாக இருந்து வந்தது. புதிய தொழில்நுட்பங்களும், யுக்திகளும் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட கலந்துரையாடல் நெறிமுறைகள், நேரடி வீடியோ ஒளிபரப்பு முறை, ஆன்லைன் தேர்வுகள், கற்றல் மையங்கள் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது. விர்ச்சுவல்(Virtual) வகுப்பறைகள்: நேரடியான வகுப்புகளைப் போலவே, வீடியோ கான்பரசிங் முறை போன்று பயிற்றுவிக்கப்படும் விர்ச்சுவல் வகுப் பறைகளின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. IIM-C, XLRI, IIM-K, MICA போன்ற தொலை நிலைக் கல்வி வழங்கும் பல்கலைக்கழகங்கள் இம்முறையைப் பின்பற்றுகின்றன. அருகில் உள்ள கற்றல் மையங்களுக்கு(Study centre) மாணவர்கள் சென்றால், பேராசிரியர் ஒளிப்பதிவு அறையில்(Studio) இருந்தபடி பாடங்களை நடத்துகிறார்.  ஒன்றுக்கு மேற்பட்ட கற்றல் மையங்கள் விசாட்(Very Small Aperture Terminal) எனப்படும் தொழில்நுட்பம் மூலம்  இணைக்கப்படுகின்றன. 'நேரடியான வகுப்புகளைப் போலவே, கலந்துரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களிடம் இருந்து கேள்வி - பதில், விவாதங்களையும் எதிர்பார்க்கிறோம். கையை உயர்த்தி தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கும்படி கோருகிறாம். இதனால், தொடர்பு கொள்வதையும், மாணவர்கள் பாடங்களைக் கவனிப்பதையும் உறுதிசெய்ய முடிகிறது. சில பேராசிரியர்கள் பாடங்களை நடத்தி முடித்ததும், அதில் இருந்து மாணவர்கள் கேள்வி, சந்தேகங்கள் கேட்பதை விரும்புகின்றனர்' என்கிறார் விசாட் முறையில் கற்பிக்கும் பேராசிரியர் ஒருவர். வெவ்வேறு இடங்களில் இருக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரே சமயத்தில் பேசுவதையும், பகிர்ந்து  கொள்வதையும் இத்தொழில்நுட்பம் சாத்தியமாக்குகிறது. இத்தொழில்நுட்பத்திற்கு சற்று செலவானாலும், தேவையற்ற  பகிர்தல்களும், திரும்பத் திரும்ப ஒரே விஷயம் அலசப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. ஆன்லைன் முறையில் கற்றல்: ஆன்லைன் வழி கற்றல் என்பது தொலைநிலைக்கல்வியின் மற்றொரு வழிமுறை. ஆன்லைனில் வழங்கப்படும் பாடங்களைச் சுயமாகப் படித்துக் கொள்ள இம்முறை வகை செய்கிறது. ஆன்லைன் வழி  விவாதங்கள் மாணவர்களிடையே பிரபலமாக இருக்கிறது. மாணவர்கள் பாடம் தொடர்பான கருத்துகளை நாடுமுழுவதும் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இம்முறையில் கலந்துரையாடல் கேள்வி பதிலாக இருக்கிறது. கொள்குறி(Objective) வகை கேள்வி பதில்கள் மூலம் இம்முறை இன்னும் எளிமைப்படுத்தப்படுகிறது. சில கேள்விகளுக்கு விரிவான விடையளிக்கும் படியும், பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செய்முறை தேர்வுகள்: மணிப்பால் பல்கலை போன்ற ஒரு சில பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் நேரடி ஒளிபரப்பு முறையில் பங்கேற்பதில்லை. அவர்களுக்கு சந்தேகங்கள் இருப்பின், பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியர்களிடம் செல்கின்றனர். பிராக்டிகல் தேர்வுகளைப் பொருத்தவரை, கற்றல் மையங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். போதிய உபகரணங்கள் நிறைந்ததாக இவ்வாய்வு மையங்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் பாடங்களையும், பல்கலைக்கழகத்தையும் தேர்வு செய்யும் போது, சம்பந்தப்பட்ட பாடத்துக்கான ஆய்வகங்கள் கற்றல் மையத்தில் போதிய வசதிகளுடன் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். தேர்வுகள்: ஆள்மாறாட்டங்களைத் தடுப்பதற்காக தங்களது கற்றல் மையங்களிலேயே தேர்வுகளை நடத்துகின்றன சில கல்வி  நிறுவனங்கள். ஆன்லைன் தேர்விலும் முறைகேடுகள் செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. மணிப்பால் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் 58 சதவீத தேர்வுகளை நேரடித்தேர்வாகவே நடத்துகின்றன. 'ஆன்லைன் தேர்வில் பங்கேற்கும்  மாணவர் முறைகேடுகளில் ஈடுபட முடியும்; ஆனால் அது கற்றுக்கொள்வதற்காகவும், கற்றுக்கொண்டதை பரீட்சித்துப் பார்க்கும் மாணவருக்கான வழிமுறை அல்ல' என்கிறார் கல்வியாளர் ஒருவர். இதர ஆய்வுக்கட்டுரைகள், அசைன்மென்டுகள் நேரடிக்கல்வி முறை மாணவர்கள் எதிர்கொள்வதைப் போலவே இருக்கின்றன. மொத்தத்தில், மின்வழிக்கற்றல்(E-Learning), விர்ச்சுவல் வகுப்பறைகள் போன்றவை, தொலைநிலைக் கல்வி மற்றும் சுயமாகக் கற்றலை ஊக்குவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !