வளமிக்க உற்பத்தித்துறை!
மத்திய, மாநில அரசுகள் உற்பத்தித் துறைக்கு அதிக ஊக்கம் அளித்துவருகின்றன. இதற்கு ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ஓரு நல்ல உதாரணம்! சீனாவைப் போன்று உலகின் மிகப் பெரிய உற்பத்தி மையங்களை உருவாக்கி ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்ற இத்திட்டம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் சுமார் 38 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 2,54,600 கோடி ரூபாய்) அந்நிய தொழில் முதலீடு ஏற்பட உள்ளது. இதில் பாதிக்கு மேல் உற்பத்தி துறைக்கு வர வாய்ப்பு உள்ளது. இத்தகையக் காரணங்களால் இந்திய உற்பத்தித் தொழில் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. ஏராளமான வேலை வாய்ப்புகளையும் இத்துறை உருவாக்கி வருகிறது. இதனால், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் 25 முக்கிய உற்பத்தித் துறைகள் உள்ளன. அவற்றில் பாதுகாப்புத் தளவாடங்கள், ரயில்வே, தானியங்கி வாகனம், இன்ஜினியரிங், மோட்டார் மற்றும் இயந்திரங்கள் தயாரிப்பு ஆகியத் துறைகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் அதிக அளவில் தேவைப் படுகிறார்கள். நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தயாரிப்பு துறையில் மட்டும், 2022ம் ஆண்டிற்குள் ஒரு கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும் என்று அரசு எதிர்பார்க்கிறது. நம் நாட்டில் வாகன உற்பத்தி, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை வேலைவாய்ப்பு வழங்குவதில் முன்னணியில் உள்ளன. ஆண்டிற்கு சுமார் இரண்டு கோடி தானியங்கி வாகனங்கள் இந்தியாவில் விற்பனை ஆகி வருகின்றன. சுமார் 2 கோடியே 34 லட்சம் தானியங்கி வாகனங்கள் உருவாக்கப்படுகின்றன. இன்று வடிவமைக்கப்படும் பெரும்பாலான வாகனங்களில் அதிக அளவு எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாகன வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பழுது பார்த்தல் ஆகிய வேலைகளுக்கு மெக்கானிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய இரண்டையும் படிக்கும் மெக்கட்ரானிக்ஸ் மாணவர்கள் தேவைப்பாடுகிறார்கள். தொழில் நிறுவனங்களில் பொறியியல் பட்டதாரிகளின் தேவைக்கு இணையாக டிப்ளமோ படித்த மாணவ, மாணவிகளின் தேவையும் இருக்கிறது. காரணம், தயாரிப்பகங்களில் சூப்பர்வைசர், ஆட்டோ இன்ஜினியர், சேல்ஸ் இன்ஜினியர், போர்மென், டிராப்ட்ஸ்மென், வொர்க்-ஷாப் டெக்னீஷியன், வொர்க்-ஷாப் சூப்பர் இன்டென்டன்ட் போன்ற நடுநிலை பணிகளை திறம்பட செய்வதற்கும் பணியாளர்கள் தேவை உள்ளது! -ஆர்.வெங்கடநாராயணன், தலைவர் - எச்.ஆர்., ஐ.டி., மற்றும் எஜூகேஷன், ரானே குரூப்.