உள்ளூர் செய்திகள்

ஆர்வத்தை திருப்பிவிடுங்கள்!

ஒவ்வொரு 4 ஆண்டுகளிலும், மாணவர்களின் செயல்பாடு மாறுக்கொண்டே இருக்கிறது; தற்போதைய அதிதொழில்நுட்ப வளர்ச்சியால், மாணவர்களின் செயல்பாடு, வேறுநிலைக்கு சென்றிருப்பதை உணர முடிகிறது! ஆசிரியர்கள் தொடர்ந்து, தங்களது அறிவை மேம்படுத்திக்கொள்ளாவிட்டால், இன்றைய மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாது. தொழில்நுட்பத்தால் நல்லது, கெட்டது இரண்டும் உண்டு. ஒரு தரப்பு மாணவர்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி கிடக்கின்றனர். இளம் பருவத்தில் அவர்களுக்கு, தினமும் குறைந்தது 8 மணிநேர உறக்கம் அவசியம். ஆனால், இன்றைய மாணவர்கள் இரவு 12 மணிக்கு மேல் தான் உறங்க செல்கின்றனர்! அதிகாலை எழுந்து, போதிய ஓய்வின்றி, 8 மணிக்குள் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மிகவும் களைப்பாக இருப்பதால், எவ்வளவு தீவிரமாக பாடம் நடத்தினாலும் அவர்களுக்கு புரிவதில்லை. இத்தகைய மாணவர்களுக்கு தட்டிக்கொடுத்து, அவர்களை பாடத்தில் கவனம் செலுத்த வைப்பது என்பது இன்றைய ஆசிரியர்களுக்கு சவாலாக உள்ளது. இந்நிலையை போக்க, ஆசிரியர்களுக்கு தொடர்ந்து மேம்பாட்டு பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமாகிறது! மாணவர்களைப் பொறுத்தவரை, ‘ஸ்கில் டெவலப்மென்ட்’ என்பது மிக மிக முக்கியமாகிறது. ரெகுலர் பாடத்திட்டத்தை கடந்து, ஒவ்வொரு ஆண்டும் பிரத்யேக பயிற்சியாளர்கள் மூலம், கணிதம், ஆங்கிலம், சாப்ட் ஸ்கில்ஸ், ஆப்டிடியூட், டெக்னிக்கல் ஸ்கில்ஸ், வேலைவாய்ப்பு திறன் என பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியுள்ளது. ‘படித்து முடித்த பிறகு, எந்த மாதிரியான நிறுவனம், சுற்றுச்சூழலில் பணிபுரியப்போகிறோம்’ என்பதை ஒவ்வொரு மாணவரும், படிக்கும்போதே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்த்து, உணர வேண்டும். அதற்கு, கல்வி நிறுவனம் உதவும்போது, மாணவர்களிடம் தெளிவு பிறக்கிறது. அவர்களது முரட்டுத்தனமான குணங்கள் எல்லாம் மறைந்து போகின்றன. அவர்கள் கண்டு, உணர்ந்த சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதில் அவர்களது ஆர்வம் திரும்புகிறது! அவர்களது ஆர்வம் தொடர்ந்து நிலைக்கும்பட்சத்தில், அவர்களால், அடுத்த நிலைக்கு முன்னேறி செல்லமுடியும். இந்த மாற்றம், அவர்களுக்கு மட்டுமின்றி, குடும்பம், சமூகம், தேசம் என அனைத்து தரப்பு முன்னேற்றத்திற்கும் அத்தியாவசியமாகிறது! ஒட்டுமொத்தமாக, படித்து பட்டம் பெற்று, கல்லூரியை விட்டு செல்லும் ஒவ்வொரு மாணவரும், ‘என்னாலும் சாதிக்க முடியும்’ என்ற எண்ணத்துடன் செல்ல வேண்டும். அது தான் இன்றைய தேவை! அதனையே இலக்காக கொண்டு தான், எங்கள் கல்வி நிறுவனமும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது! - பேராசிரியர் ஜே.கார்த்திகேயன், தலைவர், ஸ்ரீ சாஸ்தா கல்வி நிறுவனங்கள், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்