ஏற்றுமதி துறையில் பணியிழப்பு
கடந்த 1929ம் ஆண்டுக்குப் பின் இந்தியப் பொருட்களுக்கான சர்வதேச சந்தை தற்போது கடுமையான சோதனையை சந்தித்து வருகிறது. இந்தியப் பொருட்களின் உற்பத்தி குவிந்த வண்ணம் இருந்தாலும், அவற்றை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் ஏற்றுமதித் துறையில் பணிபுரியும் ஒரு கோடி பேர் வரும் மார்ச் மாதத்திற்குள் வேலைஇழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் குழுமம் (Federation of Indian Exporting Organisations)தெரிவித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 20 சதவீதத்துக்கு நிகரான ஏற்றுமதித் துறையில் ஏறத்தாழ 15 கோடி பேர் பணி புரிந்து வருகின்றனர். இத்துறை தொடர்புடைய கைவினைப் பொருட்கள், நெசவு, பின்னலாடை, தோல், ஜெம் கற்கள் மற்றும் நகை ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படவுள்ளன. இத்துறையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதமானது 30.9லிருந்து 12.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த விகிதமானது மேலும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு தரப்பிலிருந்து போதுமான அக்கறையான நடவடிக்கை இல்லாததால் இந்த நிதியாண்டின் இலக்குகளை எட்டுவது கடினமான பணி என்று எப்.ஐ.இ.ஓ., தரப்பு தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவின் 37 சதவீத ஏற்றுமதி சந்தையானது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும் இது சகஜ நிலைக்கு திரும்ப நாள் பிடிக்கும் என்றும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. வேலை இழப்பு அதிகம் நிகழவிருப்பது நெசவுத் துறையில் தான் என்று கணிக்கப்படுகிறது. வரும் சில மாதங்களில் நெசவுத் துறையிலுள்ள 10 லட்சம் பேருக்கு பணியிழப்பு ஏற்படும் நிலையே காணப்படுகிறது. இதேபோல ஜெம் மற்றும் நகைத் துறையிலுள்ள 7.5 லட்சம் ஊழியர்களுக்கும் ஏற்றுமதி தொடர்பான தோல் உற்பத்தி மையங்களில் பணி புரியும் 1.5 லட்சம் பேருக்கும் பணியிழப்பு சூழல் உருவாகியுள்ளது. பொதுவாக ஏற்றுமதியாளர்களுக்கு அடுத்த 6 மாதம் வரை உற்பத்திக்கான ஆர்டர்கள் கிடைக்கும் நிலை காணப்படும். ஆனால் தற்போதோ இந்த மாத இறுதி வரைக்கான ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளன. அரசுத் தரப்பில் இந்த சிக்கலைத் தவிர்க்க உருப்படியான முயற்சிகள் எதுவும் இல்லையென்றும் டி.இ.பி.பி. திட்டத்தை நீட்டிப்பு செய்ததைத் தவிர பிற முயற்சிகள் எதையும் அரசு செய்யவில்லை என்றும் இக்குழுமம் குற்றம் சாட்டுகிறது. இந்த சிக்கல்களிலிருந்து தப்பிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அரசு சில சலுகைகளைத் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்றுமதியிலிருந்து வரும் லாபத்திற்கு வரி விலக்கு, நீண்ட கால கடன்களில் சலுகை, உதவி நடவடிக்கைகளை குறுகிய காலத்திற்குள் எடுப்பது, டிரைவேட்டிவ்ஸ் பிரிவில் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கான ஈடுகளை வழங்குவது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதித் துறைக்கு 2009ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாகவே தெரிவதாகவும் அரசின் உடனடி உதவி கிடைக்காத நிலையில் இலக்குகளை பாதியளவு எட்டுவது கூட கடினம் என்றும் கணிக்கப்படுகிறது. ஏற்றுமதித் துறைக்கு 5 ஆண்டு வருமான வரி விலக்கு, நீண்ட காலக் கடன்களுக்கு 2 ஆண்டு சிறப்புச் சலுகை போன்ற கோரிக்கைகள் தீவிரமாக எழுந்திருந்தாலும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் இத்துறையில் பணிபுரியும் எண்ணற்ற ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருப்பது என்னவோ உண்மைதான். சலுகைகளைப் பெற்றுத் தந்து இத்துறையைக் காக்க அரசு முயற்சி செய்யுமா இல்லையா என்பதைப் பொறுத்தே இத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் அமையும் என்பது தான் நிதர்சனம்.