குழந்தைகள் உரிமை குறித்த புதிய சட்டப்படிப்பு
‘நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா’ பல்கலைக்கழகம், ‘போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் சைல்ட் ரைட்ஸ் லா’ (பி.ஜி.டி.ஆர்.எல்.,) என்ற புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஜாமியா மிலா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் ‘போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் சைல்ட் ரைட்ஸ்’ என்ற படிப்பு இருந்தாலும் குழந்தைகள் உரிமை தொடர்பான சட்டப்படிப்பு வேறு எங்கும் கிடையாது. அது போன்ற ஒரு படிப்பை வழங்கும் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் இது. இந்த பல்கலைக்கழகத்தில் 12 ஆண்டுகளாக செயல்படும் ‘குழந்தைகள் உரிமை மற்றும் சட்டம்’ என்ற சிறப்பு மையத்தின் மூலமாக இந்த படிப்பு வழங்கப்படுகிறது. இந்த தொலைநிலைக்கல்வியில் சேர பட்டதாரியாகவோ, அதற்கு இணையான தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் நிலையில் இருப்பவர்களுக்கும், குழந்தைகள் உரிமை தொடர்பான போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கும் மிகவும் அவசியமான படிப்பு இது. இந்த படிப்பை அறிமுகம் செய்யும் முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தைகள் உரிமை தொடர்பான விஷயங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டிருந்தாலும், இது பற்றிய பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது தெரியவந்தது. திட்டக்குழுவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகமும் 11வது ஐந்தாண்டு திட்டதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. அப்போது இது தொடர்பான வல்லுனர்களின் தேவை வெகுவாக அதிகரிக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏறத்தாழ 20 முதல் 25 பேர் வரை தேவை. வேறு எங்கும் குழந்தைகள் உரிமை சட்டம் தொடர்பான படிப்பு இல்லை. இதனால் அப்போது தேவைப்படும் மனித வளத்தை ஈடுகட்டும் வகையில் இந்த தொலை நிலைக்கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள பாடங்கள் - தி சைல்ட், பேமிலி அண்டு ஸ்டேட் இன் இந்தியா: ரியாலிட்டீஸ் அண்டு இஷ்யூஸ்- சைல்ட் ரைட்ஸ் பாலிசி அண்டு லா: இன்டர்நேஷனல் பிரேம் ஒர்க்- கீ லெஜிஸ்லேஷன் ரிலேட்டிங் டு சில்ரன் இன் இந்தியா- ஒர்க்கிங் வித் சில்ரன் ப்ரம் எ ரைட் பேஸ்டு பெர்ஸ்பெக்டிவ்ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்த படிப்பில் சேர்பவர்கள் மூன்று முறை நேரடி வகுப்புகளில் பங்கேற்பது அவசியம். இவை ஜனவரி, ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடக்கும். இந்த படிப்புக்கான கட்டணம் ரூ. 11 ஆயிரம். இது தொடர்பான விவரங்களுக்கு http://www.nls.ac.in/cclwebad.htm என்ற வெப்சைட்டையோ pgdcrl@nls.ac.in என்ற இ மெயில் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.