கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வயது 800
உலகம் முழுவதும் அறியப்படும் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சமீபத்தில் தனது 800வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த மகிழ்ச்சிகரமான விழாவில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் பங்கேற்றன. உலகின் புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐசக் நியூட்டன், பரிணாமத் தத்துவத்தை உலகிற்கு வழங்கிய சார்லஸ் டார்வின் போன்ற மேதைகளைத் தந்தது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தான். இந்தியாவின் தற்போதைய பிரதமரும் இப்பல்கலைக்கழகத்தோடு இணைப்புப் பெற்ற செயிண்ட் ஜான் கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிறைவை உலகெங்குமுள்ள பல்வேறு தேவாலயங்களின் மணியொலியை ஒரே நேரத்தில் ஒலித்து வித்தியாசமாகக் கொண்டாடினர். பல்கலைக்கழக வளாகத்திலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மணியொலியும் நிறைந்திருந்தது. புகழ் பெற்ற பில் ஏரிஸ் உருவாக்கிய மணியொலி மத்திய இசையை கேம்பிரிட்ஜ் நகரின் 4 தேவாலயங்கள் ஒரே நேரத்தில் இசைத்துக் கொண்டாடின அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளின் தேவாலயங்களிலும் இந்தியாவின் கோல்கட்டா நகரிலுள்ள செயிண்ட் பால் கதீட்ரல், டில்லியின் புனித இருதய தேவாலயம் மற்றும் செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயம், பெங்களூருவிலுள்ள செயிண்ட் மார்க் தேவாலயம் போன்றவற்றிலிருந்து எழுந்த மணியொலி உலகையே அதிர வைத்தது. இங்கிலாந்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் மணியொலி எழுப்பப்பட்டது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் லிங்கன் தேவாலயத்திலும் மணியொலி எழுப்பப்பட்டது. கேம்பிரிட்ஜில் துவங்கி உலகெங்கும் வியாபித்துள்ள பல்வேறு வெற்றியாளர்களின் செயலை விளக்கும் ஒலி, ஒளிக் காட்சிகளுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாபெரும் மேதைகளான நியூட்டனுக்கும், டார்வினுக்கும் மரியாதை செலுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜின் 800வது ஆண்டு நிறைவும் அதன் கொண்டாட்டங்களும் உலகெங்குமுள்ள அதன் முன்னாள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு முக்கியமான தருணம் என்பதில் சந்தேகமில்லை.