இந்தியாவுக்கு தேவை இன்னும் 302 பல்கலைக்கழகங்கள்
பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. இதனால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் மட்டுமே. இதை 11வது ஐந்தாண்டு திட்டத்தில் 15 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு 18 முதல் 24 வயதுக்குள் இருக்கும் 2 லட்சம் இளைஞர்களுக்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். அதே போல 1 லட்சம் பேருக்கு 10 கல்லூரிகள் தேவை. ஆனால் தற்போதைய நிலையில் இந்தியாவில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏறத்தாழ 302 புதிய பல்கலைக்கழகழகங்கள் தேவை. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் மட்டும் 63 பல்கலைக்கழங்களை அமைக்க வேண்டும். பீகாருக்கு 32, மேற்கு வங்கத்துக்கு 30, மகாராஷ்டிராவுக்கு 20 என்ற எண்ணிக்கையில் பல்கலைக்கழங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே போல 2 ஆயிரத்து 162 புதிய கல்லூரிகளையும் தொடங்க வேண்டும். நாடு முழுவதுதம் 10 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் 2 சதவீத மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உயர்கல்விக்கு நிதியுதவி வழங்கவுள்ளனர். முதல் இரண்டாண்டுகளுக்கு ரூ. ஆயிரமும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு ரூ. 2 ஆயிரமும் இவர்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏறத்தாழ 41 ஆயிரம் மாணவர்களும், 41 ஆயிரம் மாணவிகளும் பயனடைவார்கள். தொழில்கல்வியில் சேரும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கடனின் வட்டி சுமையை குறைக்கவும் மானியம் வழங்கப்படவுள்ளது. தற்போது 10வது ஐந்தாண்டு திட்டத்தில் உயர்கல்விக்காக 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 12வது ஐந்தாண்டுத்திட்டத்தில் இதை 85 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர்கல்விக்காக நிதிஒதுக்குவதை மாநில அரசுகள் குறைத்து வருவது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் மாநில கல்விக்கான நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த மாநில அரசுகளின் ஒத்துழைப்பு அவசியம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார்.