உள்ளூர் செய்திகள்

சப்ளை செயின் மேனேஜ்மென்ட் - துறை அறிமுகம்

எல்லைகள் சுருங்கி வரும் இன்றைய பொருளாதார உலகில் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன என்பதில் சந்தேகமில்லை. இன்றைய தினம் உலகில் வெவ்வேறு பகுதிகளிலும் கூட கொரிய கார்களும், சுவிஸ் சீஸ்களும், தென்னாப்ரிக்க ஒயின்களும், இந்திய ஆடைகளும், ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும், இத்தாலிய நாகரிகப் பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. இந்தப் பொருட்கள் சாதாரணமாக உலகின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு பயணிக்கின்றன. தற்போதுள்ள அளவுக்கு லாஜிஸ்டிக்சும் சப்ளை செயின் மேனேஜ்மென்டும் என்றுமே முக்கியத்துவம் பெற்றதில்லை. நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் சேவையில் நிறைவைத் தரும் முக்கிய காரணியாக இது மாறியுள்ளது. உலக வர்த்தகத்தில் ஏற்பட்டு வரும் பரவலான மாற்றங்களும் தடை நீக்கங்களும் இத்துறையின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கிறது. லாஜிஸ்டிக்ஸ் - சிறு விளக்கம்உலக அளவில் லாஜிஸ்டிக்சும் சப்ளை செயின் மேனேஜ்மென்டும் நெருங்கிய தொடர்புடையவை. பர்ச்சேஸிங், மெட்டீரியல் மேனேஜ் மென்ட், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், போக்குவரத்து, சுங்கத் தீர்வை, அன்னியச் செலாவணி, தகவல் தொழில் நுட்பம், கலாச்சார அம்சங்கள் போன்ற பல விஷயங்களும் இத்துறையோடு தொடர்புடையவை. லாஜிஸ்டிக்ஸின் மேலாளர் பணியே இன்றைய நிறுவனங்களின் பணிகளில் அதிக சவாலுடைய பணியாகக் கருதப்படுகிறது. இந்த மேலாளரின் தனிமனிதத் திறன்களைப் பொறுத்தே வாடிக்கையாளர் சேவையானது உறுதி படுத்தப்படுகிறது. வெளியுலகிற்கு அதிகம் தெரியாத போதும் பல்வேறு நிறுவனங்கள் இந்த பதவிக்கே அதிக மரியாதையைக் கொடுக்கின்றன. பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தன்மையைப் பொறுத்து சப்ளை செயின் அமைப்பானது மாறுபடுகிறது. சப்ளை செயின் என்றால் என்ன?பொருட்களை உற்பத்தியாகும் இடத்திலிருந்து உபயோகிப்பவருக்குக் கொண்டு சேர்க்கும் பல்வேறு வசதிகளையும் அனுப்பும் வசதிகளையும் கொண்ட வலையமைப்பே சப்ளை செயின் எனப்படுகிறது. பொருட்களை வாங்குதல், அவற்றை இடைநிலை மற்றும் இறுதியான வடிவத்திற்கு மாற்றுவது, பின்பு அதை நுகர்வோரின் இடத்திற்கே கொண்டு செல்வது ஆகியவை சப்ளை செயின் அமைப்பின் பணியாகும். பொருத்தமானவர் யார்?லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் துறையானது சவாலான துறை என்பதால் இதில் பணி புரிய நல்ல தகவல் தொடர்புத் திறன், பகுத்தாராயும் திறன், வாடிக்கையாளரை மையப்படுத்தி செயல்படும் தன்மை போன்றவை கட்டாயம் தேவைப்படுகின்றன. இவற்றுடன் லட்சிய வேட்கை, கடின உழைப்பு, கணித மற்றும் மொழித் திறன்களும் கூடுதல் தேவைகளாக உள்ளன. துறைப் படிப்புகள்இத்துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இளநிலைப் பட்டப் படிப்பை 3 ஆண்டுகளிலும் பட்ட மேற்படிப்புகளை 2 ஆண்டு வரையிலும் படிக்கலாம். பிளஸ் 2 முடித்தவர்கள் இளநிலைப் பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். ஏற்கனவே வேறு பிரிவில் பட்டம் பயின்றவர்களும் இந்த படிப்பைப் படிக்கலாம். இத் துறையின் பல்வேறு படிப்புகள் தொலைநிலைக் கல்வி முறையிலேயே தரப்படுகிறது. இத் துறையில் முழுநேரமாகப் படிக்கக்கூடிய 2 ஆண்டு எம்.பி.ஏ., படிப்புகளும் உள்ளன. துறை வளர்ச்சி எப்படி?இத்துறையானது உற்பத்தித் துறையுடன் மட்டுமே தொடர்புடையதல்ல. வர்த்தக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சேவை நிறுவனங்களான சில்லறை வர்த்தகம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றோடும் தொடர்புடையதாக இது விளங்குகிறது. எனினும் லாஜிஸ்டிக்ஸ் துறையின் முக்கியப் பயன்பாடு பெரிய அளவில் மூலப் பொருட்களை உற்பத்தி செய்து இடம் மாற்றும் துறையாக இருப்பதுதான். லாஜிஸ்டிக்ஸ் துறையின் நிர்வாகமானது ஒரு கலையைப் போல கடினமானதாகவும் முழு வீச்சில் வெற்றி பெற மிகக் கடினமானதாகவும் உள்ளது. துறையின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது என்றாலும் சவால்களை எதிர் கொள்ள விரும்புபவர்களாகவும் இலகுத் தன்மை கொண்ட சப்ளை செயின் வலையமைப்பை உருவாக்கி நிர்வகிக்கும் திறமை பெற்றவர்களாகவும் இருந்தால் அவர்கள் வாழ்வு வளமானதாக மாறிவிடும் என்பது நிச்சயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !