உள்ளூர் செய்திகள்

அதிகமான துறைகளுடன் அலிகார் பல்கலை., சிறந்த கல்வி நிறுவனங்கள் (50)

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் 1875ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரத்தில் இது அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது தொடங்கப்பட்ட ஒரு சில உயர்கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த பல்கலைக்கழக மாணவர்களில் பலர் சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தொடங்கப்பட்ட போது கோல்கட்டா பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டது. பின்னர் அலகாபாத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1920ம் ஆண்டு இதற்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. பிரிட்டனின் பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை மாதிரியாக கொண்டு இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் 80க்கும் மேற்பட்ட துறைகள் செயல்படுகின்றன. 280 படிப்புகள் வழங்கப்படுகின்றன. 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். சில குறிப்பிட்ட படிப்புகளில் சார்க் மற்றும் காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 2 ஆயிரம் ஆசிரியர்கள் இங்கு பணிபுரிகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிவுகள்- விவசாய அறிவியல்- கலை- வணிகம்- இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம்- உயிர் அறிவியல்- மேலாண்மை- மருத்துவம்- அறிவியல்- சமூக அறிவியல் - இறையியல்- யுனானி மருத்துவம்- பயோடெக்னாலஜி- நானோடெக்னாலஜி- இந்திய மொழியும் கலாசாரமும்- வெஸ்ட் ஏஷியன் ஸ்டடீஸ் புதிதாக ஐந்து மண்டல மையங்கள் அமைக்க இந்த பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபால், மகாராஷ்டிராவில் புனே, மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாத், கேரளாவில் மலப்புரம், பீகாரின் கத்திகர் ஆகிய இடங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழக நூலகத்தில் 9 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அரிய பழைய புத்தகங்கள் பல இந்த நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஏழு மாடிகளுடன் தனியாக 5 ஏக்கர் பரப்பளவில் பசுமையான சூழலில் இந்த நூலகம் அமைந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஜாகிர் உசேன், பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலிகான், எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான், தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, எழுத்தாளர் ராஜா ராவ், இந்தி நடிகர் நசீருதீன் ஷா, இந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர், முன்னாள் மத்திய அமைச்சர் அகமத் கித்வாய், முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஷேக் அப்துல்லா ஆகியோர் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்களே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !