உள்ளூர் செய்திகள்

தேர்வு முறைக் குறைபாடுகள்

இந்தியாவின் மிகச் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்ட மாநாடு ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியத் தேர்வு முறை தவறானது என்ற ஒருமித்த கருத்தை இதில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர். தற்போதைய தேர்வு முறையானது நம்மிடம் கேள்வி எழுப்பும் மனப்பாங்கை உருவாக்கத் தவறியுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய தேர்வு முறையின்படி ஆண்டு முழுவதும் படிப்பதற்கான தேவையில்லாமல் இருப்பதாகவும் தேர்வு நெருங்கும் சமயத்தில் மட்டும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் உண்மையான தீவிரத்துடன் படிப்பதாகவும் கல்வியாளர்கள் கருதுகிறார்கள். கேள்விகளை எழுப்புகிற மாணவர்களை விட மனப்பாடம் செய்து எழுதுபவர்களையே தற்போதைய கல்வி முறை உருவாக்குவதாக இவர்கள் கருதுகிறார்கள்.ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் தேர்வு முறையை விட பருவத்தேர்வு எனப்படும் செமஸ் டர் முறை மாணவர்களுக்குக் கூடுதல் நன்மை தருவதோடு ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் பலரும் வேலை கிடைப்பதற்கான நோக்கத்தில் மட்டுமே படிக்கிறார்கள். அவர்கள் தங்களது முழுத் திறனையும் உபயோகித்து படிப்பதில்லை. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடங்களைப் படிக்கவும் அத் துறையில் அவர்களுக்கான பிரத்யேக இடத்தை உருவாக்கவும் அவர்களிடம் தன்னம்பிக்கை வளரும் விதத்தில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இன்றைய கல்வி நிறுவனங்கள் பலவும் வேலை தேடுபவர்களை உருவாக்கவே முனைப்பு காட்டுகின்றன. வேலை தருபவர்களாக அவர்களை மாற்ற எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் தொழில் முறைப் பயிற்சிகளின் மூலமாகவே இணைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள். தற்போதைய நிலையில் 7 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி கிடைப்பதாகவும் இனி வரும் நாட்களில் இது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமான முறையில் நடத்தப்படும் கல்வி மற்றும் தேர்வு முறையிலிருந்து விலகி வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில் முறை பயிற்சி முறைக்கு இந்தியா மாறிட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உருவாகிவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !