உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., படிப்பு ஆலோசனை...

எம்.பி.ஏ., படிப்பின் முக்கியத்துவம், பாடப்பிரிவுகள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில், ‘கேட்வே பி ஸ்கூல்ஸ்-2009’ என்னும் எம்.பி.ஏ., கல்விக் கண்காட்சியை தினமலர் நாளிதழ் சமீபத்தில் நடத்தியது. சென்னை, கோவையில் நடந்த இந்த கல்வி கண்காட்சியில் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தரங்கமும் இடம்பெற்றது. மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில், கல்வி நிபுணர்களின் சொற்பொழிவு அமைந்திருந்தது. அவை இங்கே... * இந்தியாவில் உள்ள ‘எம்.பி.ஏ., கல்வி மையங்கள்’ குறித்து லிபாநிறுவனர் கஸ்மிர் ராஜ்: இந்தியாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி - ஸ்கூல்கள் இருந்தும், அவற்றில் நூறு மட்டுமே ரேங்கில் வருகின்றன. மேனேஜ் மென்ட் படிப்புகளை வழங்கும் பி - ஸ்கூல்கள் அனைத்தும் உறைவிடத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கல்லூரியிலேயே தங்கி படிக்கும் போது மாணவர்களிடையே குழுவாகச் சிந்திக்கும் மனப்பான்மையும், எந்த ஒரு பிரச்னைக்கும் உடனடித் தீர்வுகளைக் கொண்டு வரும் திறனும் வளரும். மற்ற துறைகளை ஒப்பிடும் போது, எம்.பி.ஏ., படித்தவர்களுக்கு ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. மேலாண்மை படிப்பில் மனிதவளம், மார்க்கெட்டிங், நிதி, சிஸ்டம், இன்டர்நேஷனல் பிசினஸ், ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் ஆகிய பிரிவுகள் அதிகளவில் மாணவர்களால் தேர்வு செய்யப்படுகின்றன. இதுதவிர இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேடு, பேகல்ட்டி  ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், எக்ஸ்.எல்.ஆர்.ஐ., டாடா ஸ்கூல் ஆப் பிசினஸ் போன்ற ‘ஸ்பெஷலிஸ்டு’ மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. உலக நாடுகளின் மக்கள்தொகை அடர்த்தி சுருங்கி வருகிறது. மேனேஜ்மென்ட் துறையில் சிறப்படைய ஆங்கில அறிவு மிகவும் அவசியம். சீனாவை பொறுத்தவரை அதிக மக்கள் தொகை இருந்தும், ஆங்கில மொழியில் அவர்களால் சிறந்து விளங்க முடியவில்லை. இந்தியர்கள் அப்படி இல்லை. மேனேஜ்மென்ட் படித்த, சிறந்த மொழித்திறன் உடையவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இது மிகச் சிறந்த துறை. ஒரே பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்காமல், பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளை தேட வேண்டும். உலகின் எந்தபகுதியிலும் வேலை செய்ய உங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். * எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வுகள், அவற்றிற்கு தயாராகும் முறை குறித்து ‘டைம்’ பயிற்சி நிறுவன தலைவர் பாலசுப்ரமணியன்:இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு காமன் ஆப்டிடியூட் டெஸ்ட் (கேட்), எக்ஸ்.எல். ஆர்.ஐ., நடத்தும் எக்ஸ்.ஏ.டி., சிம்பியாசிஸ் நடத்தும் எஸ்.என்.ஏ.பி., (சினாப்) என நாட்டின் சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களின்அடிப்படையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மற்ற பிரபல மேலாண்மை கல்வி நிறுவனங்களும் அட்மிசன் வழங்குகின்றன. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் எம்.பி.ஏ., படிப்பில் சேருவதற்கு ‘டான்செட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள் பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் நடத்தப்படுகின்றன. டான்செட் தேர்வு மட்டும் மே மாதம் நடத்தப்படுகிறது. இந்த ‘ஆப்டிடியூட்’ தேர்வுகளில் மாணவர்களது குவான்டிடேடிவ் எபிலிட்டி, ரீசனிங் (லாஜிக்கல் எபிலிட்டி) மற்றும் ஆங்கில புலமை ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்த தேர்வுகள் அனைத்தும் அப்ஜக்டிவ் முறையிலேயே நடத்தப்படுகின்றன. இத்தேர்வில் போதிய மதிப்பெண் எடுப்பவர்களை, அந்தந்த கல்வி நிறுவனங்கள் குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணலுக்கு அழைக்கின்றன. இவற்றிலும் தேர்வு பெறும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் அட்மிசன் வழங்குகின்றன. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பிரபல கல்வி நிறுவனங்களில் அட்மிசன் பெற மாணவர்கள் முன்கூட்டியே தயாராக வேண்டும். தேர்வு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும். பிரச்னைகளை சமாளிக்கும், தீர்வு காணும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டு. ஆங்கில மொழி அறிவு, கணித அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வு வினாத் தாள்களை கொண்டு சுய பரிசோதனை செய்யுங்கள். இதுபோன்ற மற்ற கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளையும் எழுதுங்கள். இதன்மூலம், தேர்வு பயம் நீங்கி, சிறந்த மதிப்பெண்களை பெற முடியும். எம்.பி.ஏ., படிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் அதற்கான பயிற்சியை உடனே தொடங்குங்கள். * எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்து டி.சி.எஸ்., துணை இயக்குனர் கிருஷ்ணன்: எம்.பி.ஏ., படித்தவர்களுக்கு சிறப்பான வேலையும், சம்பளமும் கிடைக்க முயற்சி அவசியம். தற்போது நிதி, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், ஓட்டல், மருத்துவம் மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் எம்.பி.ஏ., படித்தவர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது. தற்போதைய சூழலில், சுகாதாரம், கல்வி மற்றும் விருந்தோம்பல் துறையில் அதிகளவில் எம்.பி.ஏ., படித்தவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர எம்.பி.ஏ., படித்தவர்கள் புதிய துறைகளை நாடிச் செல்ல வேண்டும். முயற்சி, தெளிவு, விழிப்புணர்வு மற்றும் முன்னாள் மாணவர்களுடனான நீடித்த தொடர்பு ஆகியவை எம்.பி.ஏ., மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பிரகாசமாக்கும். * வெளிநாட்டில் எம்.பி.ஏ., குறித்து சோப்ராஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் இயக்குனர் அமிதாப்: சர்வதேச அளவில் உள்ள வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு கலாசாரம், அதிக சம்பளம் ஆகியவையே வெளிநாட்டுக் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணம். வெளிநாட்டுக் கல்வியை பொறுத்தவரை, கல்விக் கட்டணத்திற்கு இந்திய மாணவர்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதற்கும் இது ஒரு முக்கிய காரணியாக உள்ளது. தற்போது பெரும்பாலான மாணவர்கள் உதவித்தொகை பெற்று தான் வெளிநாடுகளில் படிக்கின்றனர். இதற்கு வங்கிகளும், கல்வி நிறுவனங்களும் உதவுகின்றன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ கூட எம்.பி.ஏ., படிக்கலாம். குடும்பத்தின் பொருளாதார நிலை, எதிர்கால திட்டம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பது குறித்து முடிவு செய்யுங்கள். * இளம் சாதனையாளரும், புட் கிங் நிறுவனருமான சரத்பாபு:ஒரு கோடி பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என சிறு வயதிலேயே இலக்கு நினைத்தேன். சிறுவயதில் இருந்தே சிறப்பாக படித்ததால், ஐ.ஐ.எம்., அலகாபாத்தில் எம்.பி.ஏ., படிக்க முடிந்தது. பிரபல ஐ.டி., நிறுவனத்தில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு, மிகக் குறைந்த மூலதனத்தில் ‘புட் கிங்’ நிறுவனத்தை தொடங்கினேன். முதல் இரண்டு ஆண்டுகள் கடும் போராட்டத்தை சந்தித்தேன். தற்போது இந்த நிறுவனத்தில் 200 பேர் பணிபுரிகின்றனர். உங்களுடைய இலக்கு என்ன என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். அதற்கேற்ப படிப்பை தேர்வு செய்யுங்கள். சாதனை என்பது நீங்கள் நிர்ணயிப்பது தான். அதற்கான வரையறைகளையும் நீங்கள் தான் நிர்ணயிக்க வேண்டும். * எம்.பி.ஏ., படிப்பின் பாடப்பிரிவுகள் குறித்து இந்தூர் ஐ.ஐ.எம்.,இயக்குனர் ரவிச்சந்திரன்:மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எந்த படிப்பையும் தேர்வு செய்யாதீர்கள். உங்கள் விருப்பப்படி படிப்பை தேர்வு செய்யுங்கள். என்ன படிப்பது என்பதைவிட எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். எந்த ஒரு விஷயத்தையும் முறையாக செய்ய கற்றுக்கொடுப்பது தான் எம்.பி.ஏ., படிப்பின் அடிப்படை  தத்துவம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !