இஸ்ரோ வழிகாட்டுதலில் ஐ.ஐ.எஸ்.டி., - சிறந்த கல்வி நிறுவனங்கள் (59)
இந்தியா கடந்த சில ஆண்டுகளில் விண்வெளி அறிவியலில் மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து விண்வெளி அறிவியல் தொடர்பாக படிப்புகளை மட்டும் வழங்கும் பிரத்யேக கல்வி நிறுவனத்தை இந்திய விண்வெளி ஆய்வு கழகம் (இஸ்ரோ) 2007ம் ஆண்டு தொடங்கியது. ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி’ (ஐ.ஐ.எஸ்.டி.,) என்ற பெயரில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்த கல்விநிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.எஸ்.டி.,யை விரைவில் நெடுமாங்காடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் நிரந்தர வளாகத்துக்கு மாற்றவுள்ளனர். எனினும் விண்வெளி ஆய்வு மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை ஐ.ஐ.எஸ்.டி., தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். புதிய வளாகம் வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக்கூடம், ஹாஸ்டல், மெஸ், கம்ப்யூட்டர் சென்டர் என பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.எஸ்.டி.,க்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இளநிலை படிப்புகளை வழங்கும் உலகின் முதல் விண்வெளி பல்கலைக்கழகம் ஐ.ஐ.எஸ்.டி., தான். கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டார். இங்குள்ள படிப்புகள்- பி.டெக்., ஸ்பேஸ் டெக்னாலஜி (ஏவியானிக்ஸ்)- பி.டெக்., ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்- எம்.எஸ்சி., அப்ளைடு சயின்ஸ் (ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பு)ஸ்பேஸ் டெக்னாலஜி படிப்பில் 50 இடங்களும், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படிப்பில் 40 இடங்களும், எம்.எஸ்சி., அப்ளைடு சயின்ஸ் படிப்பில் 30 இடங்களும் உள்ளன. எம்.எஸ்சி.,யில் சிறப்பு பாடங்களாக அஸ்டிரானமி, அஸ்டிரோ பிசிக்ஸ், ரிமோட் சென்சிங், அட் மாஸ்பியரிக் சயின்ஸ் ஆகியவை இடம் பெரும். விரைவில் தொடங்கவுள்ள முதுநிலை படிப்புகள் - எம்.டெக்., ரேடியோ பிரிக்வன்சி அண்டு மைக்ரோவேவ்- எம்.டெக்., அடாப்ட்டிவ் ஆப்டிக்ஸ்- எம்.டெக்., சாப்ட் கம்ப்யூட்டிங் 10 மாணவர்களுக்கு ஒருவர் என்ற அளவில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐ.ஐ.எஸ்.டி., யில் படிப்பை நிறைவு செய்து முதல் வகுப்பில் தேர்வாகும் மாணவர்களுக்கு இஸ்ரோ வேலைவாய்ப்பை வழங்குகிறது. சேர விரும்பும் மாணவர்கள் குறைந்தது ஐந்தாண்டுகள் பணியாற்ற வேண்டும். ஐ.ஐ.டி.,யை போலவே இந்தகல்வி நிறுவனத்தில் ‘ஐ.ஐ.டி., ஜே.இ.இ.,’ மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.