குழு விவாதம்- சில உத்திகள்
இன்றைய கால கட்டத்தில் எம்.பி.ஏ., போன்ற உயர் படிப்புக்கு மட்டுமல்லாது வேலைகளுக்கும் குழுவிவாதம் என்பதை ஒரு வடிகட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர். பெரிய நிறுவனங்கள் அடிப்படையில் தங்களது ஊழியர்களின் ஆப்டிடியூட், பொது அறிவு, பேசும் திறன், அடுத்தவரைக் கவரும் அம்சம் என பல்வேறு தனிநபர் திறன்களை நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் போன்றவை மூலமாக அறிந்து கொள்கின்றன. பொதுவாக குழு விவாதம் மூலமாக என்ன அறியப்படுகிறது? தனி நபர் ஒருவர் ஒரு குழுவாக செயல்படும் திறனைக் கொண்டிருக்கிறாரா, தனது கருத்தை ஒரு பெரிய குழுவில் கூட நிலை நிறுத்தும் திறன் கொண்டவராக இருக்கிறாரா என்பதும் குழு விவாதங்கள் மூலமாக பொதுவாக அறியப்படுகிறது. பொதுவாக எந்தக் குழு விவாதத்தை எடுத்துக் கொண்டாலும் அது 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே நடத்தப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் 8 முதல் 10 நபர்கள் வரை இடம் பெறுகின்றனர். இவர்களை தேர்வுக் குழுவின் 2 முதுநிலை தேர்வாளர்கள் பரிசீலிக்கின்றனர். இத்தகைய குழு விவாதங்களில் நமக்குத் தெரியாத தற்போதைய நடப்புச் செய்திகள் விவாதத் தலைப்பாகத் தரப்பட்டால் என்ன செய்யலாம் என பார்க்கலாம். பொதுவாக நடப்பு நிகழ்ச்சியைக் கொடுப்பதன் நோக்கமே தனி நபரின் பொது அறிவு மற்றும் அன்றாட வாழ்வில் உள்ள நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான பார்வை ஆகியவற்றை அறிவது தான். எனவே இது மாதிரியான தலைப்பை எதிர்கொள்ள நாம் கட்டாயம் செய்ய வேண்டியது செய்தித்தாள் படிப்பது தான். ஒரு குழு விவாதத்தில் தரப்படும் தலைப்பானது அதற்கு முந்தைய 6 மாத காலத்திற்குட்பட்ட செய்தியாக இருந்தாலும் அது நடப்புச் செய்தியாகவே அறியப்படுகிறது. எனவே நமக்கு சற்றும் அறிமுகமில்லாத தலைப்பாக இருந்தால் என்ன செய்யலாம்? ஒரு குழு விவாதத்தை மீன் விற்கும் சந்தை போலக் கருதும் மனப்பாங்கு தான் பலருக்கும் இருக்கிறது. இதனால் அவர்களது வெற்றிக்கான வாய்ப்பு கணிசமாக குறைந்து விடுவதை அவர்கள்அறிவதில்லை. குழு விவாதத்தில் சப்தமாகப் பேசி பிறரை அடக்குபவர்களைத் தேர்ச்சி செய்ய தேர்வுக் குழு பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு குழுவாக இயங்கி பிறருக்கும் பேச வாய்ப்பளிக்கும் நபர்களையே தேர்வுக் குழு கவனிக்கிறது. அதாவது கவனித்துக் கேட்கும் தன்மையுடையவர்களையே தேர்வு செய்ய தேர்வுக் குழு முனைகிறது. பொதுவாக குழு விவாதத்தைத் தொடங்குபவர்கள் கட்டாயம் தேர்வு செய்யப்படுவர் என்ற தவறான கருத்து பலருக்கு இருக்கிறது. இந்த நினைப்பால் தான் கூச்சலும் குழப்பமும். நமக்குத் தெரியாத தலைப்பாகக் கொடுக்கப்படும் போது என்ன செய்யலாம்?நமக்குத் தெரியாத தலைப்பு கொடுக்கப்படும் நிலையில் முதலில் கவனிப்பதில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிறர் பேசுவதிலிருந்தும் விமர்சிப்பதிலிருந்தும் பேசப்படும் கருத்துக்களை கிரகித்துக் கொள்ள வேண்டும். இதிலிருந்தே நமது கருத்தை உருவாக்கி அதனைத் தெளிவாகப் பேசலாம். மாறாக பிறர் பேசுவதில் பயம் கொண்டு பேசாமல் இருந்து விடக்கூடாது. தலைப்பு நாம் அறியாததாக இருந்த போதும் பிறர் கருத்துக்களின் அடிப்படையில் மொத்தக் கருத்தை மாற்றியமைத்து தெளிவாக அனைவருக்கும் புரியும் விதத்தில் நாம் தரலாம். இறுதியாக அனைவரிடத்திலும் ஒரு லாஜிக்கான கேள்வியை முன் வைக்கலாம். நமது கருத்துக்களை வரிசைப்படுத்தி அர்த்தத்துடன் முழுமையாகவும் சுருக்கமாகவும் அனைவருக்கும் புரியும்படி சொல்லலாம். நமக்குத் தெரியாத தலைப்பின் விவாதத்தில் ஈடுபடுவதை விட அது குறித்த சம/எதிர்கருத்துக்களைக் கூற முனைவது நல்ல உத்தியாக அமையும். பிறரின் கருத்துக் களை அறிந்து அதற்கேற்ப கருத்துருவாக்கம் மற்றும் பரிந்துரைகளைச் செய்வதன் மூலமாக வெற்றியை எளிதாக்க முடியும்.