ஐ.ஐ.டி., சில எதிர்காலச் சிந்தனைகள்
நமது ஐ.ஐ.டி.,க்கள் உலக அளவில் மதிப்பும் புகழும் பெற்றவை என்பதை அறிவோம். இவற்றின் தரத்தை மேலும் மேம்படுத்தும் விதத்தில் யஷ்பால் குழுவானது சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முக்கிய முடிவுகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. இதுவரை தனித்து அறியப்பட்ட ஐ.ஐ.டி.,க்கள் இனி சமூக மேம்பாட்டுக் கல்வி நிறுவனங்களாக மாறும் பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. இதன் மூலம் மனிதவியல், சட்டம் மற்றும் மருத்துவத் துறைப் படிப்புகளையும் ஐ.ஐ.டி.,க்களின் மூலமாக தர முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. செயல் திறத்தின் அடிப்படையில் பார்த்தால் ஐ.ஐ.டி.,க்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்த உயர்ந்த செயல்திறனை பிற உயர் கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் பகிர்ந்து கொண்டு அறியச் செய்வதற்கான சூழலே இல்லை என்று கூறலாம். சுய கட்டுப்பாடு மற்றும் தன்னாட்சி நிர்வாகம் செய்யும் திறனை ஐ.ஐ.டி.,க்கள் பெற வேண்டுமானால் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக நிதி மேலாண்மை போன்றவற்றில் சிறப்புத் திறனைப் பெற முடியும் என்று மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவை சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழி முறைகள் குறித்த ஆய்வுகளும் இந்த குழுவால் மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஐ.ஐ.டி.,க்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னையாக இருப்பது ஆசிரியர் பற்றாக்குறைதான். 2020ம் ஆண்டு வாக்கில், சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய ஐ.ஐ.டி.,க்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மாணவர் எண்ணிக்கை தற்போதைய 40 ஆயிரத்திலிருந்து அதிகரித்து ஒரு லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உள்ளது போன்று 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தை நிலை நிறுத்த வேண்டுமானால், 2020ம் ஆண்டுக்குள் ஐ.ஐ.டி.,க்கள் 10 ஆயிரம் ஆசிரியர்களை பணியில் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், அது 3 முதல் 4 ஆயிரம் ஆசிரியர்களாக மட்டுமே இருக்கும். டில்லி ஐ.ஐ.டி.,யில் செய்தது போல, திறமை மிக்க இளம் ஆசிரியர்களின் மூலமாக அனுபவமிக்க பழையவர்களை உற்சாகப்படுத்துவது இதற்குத் தீர்வாக அமைந்திடும் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு கட்டாயம் இருக்கும் என்று மத்திய மனித வள அமைச்சகம் உறுதி செய்துள்ளது. டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றில் பல்வேறு ஐ.ஐ.டி.,க்களின் இயக்குனர்கள் தங்களது நிறுவனத்தின் உள் கட்டமைப்பு வசதி, பாடப்பகுதி, ஆசிரியர் எண்ணிக்கை போன்றவற்றை மேம்படுத்துவது குறித்த அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். இவை தவிர வளாகங்களில் மின் வசதி, குடிநீர் வசதி போனற பிரச்னைகளும் அலசப்பட்டன. ஐதராபாத்திலுள்ள ஐ.ஐ.டி., சார்பாக ஆய்வுப் படிப்புகளின் தேவையும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனிதவியல் துறையை இந்த ஐ.ஐ.டி., சமீபத்தில் ஸ்கூல் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் என்று பெயர் மாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறை சார்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்துவது, வாடிக்கையாளர்கள் தேவையை உணர்த்தும் பாடப்பகுதிகள், பணி வாய்ப்பை உத்தரவாதம் செய்யக் கூடிய படிப்புகளைக் கொண்டு வருவது போன்ற கருத்துச் செறிவுள்ள பல்வேறு விவாதங்கள் இந்த ஒரு நாள் கருத்தரங்கில் பேசப்பட்டிருப்பது ஐ.ஐ.டி.,க்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அமைந்துள்ளது.