உணவு தொழில்நுட்பம் - துறை அறிமுகம்
ஒரு குடும்பத்திலுள்ள அனைவருமே வேலைக்குச் சென்று வரும் இன்றைய வேகமான காலகட்டத்தில் முழு சமையலை வீடுகளில் மேற்கொள்வது எவ்வளவு சிரமம் என்பதை அனைவரும் அறிவோம். வசதிக்கேற்ற உணவு முறையைத் தான் இன்று பல வீடுகளிலும் கடைப்பிடிக்கின்றனர். இதனால் கச்ஞிடுஞுஞீ ஊணிணிஞீ என்னும் ரெடிமேட் உணவுகளுக்குத் தான் கடுமையான கிராக்கியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு என்பது அனைவரின் முன்னுரிமையாகவும் மாறியுள்ளது. இதனால் தான் இந்தியாவின் உணவு அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்று பலராலும் பேசப்படும் மற்றும் கவனிக்கப்படும் துறையாக மாறியுள்ளது. உணவைத் தேர்வு செய்வது, பாதுகாப்பது, பண்படுத்துவது, பேக்கிங் செய்வது, வினியோகிப்பது ஆகியவற்றைப் படிப்பதே உணவு தொழில்நுட்பத்தின் சாராம்சம். உணவு தயாரிப்புக்குப் பயன்படும் பொருட்களின் தன்மை, நுண்ணுயிரிகளின் தன்மை, வேதிப் பொருட்களின் அளவு போன்றவற்றைப் பொறுத்து உணவின் சுவை, முழுமையான மற்றும் சத்துக்களுடன் கூடிய உணவை தயாரிப்பது பற்றி இந்தத் துறையின் வல்லுனர்கள் கூறுகின்றனர். பழங்கள், காய்கறிகள், மாமிசம், மீன், முட்டை, பால், தானியங்கள், மசாலாப் பொருட்கள், ஜூஸ்கள், தேனீர் மற்றும் பல்வகை உணவுப் பொருட்களின் தரத்தையும் உறுதி செய்திடுவதில் புட் டெக்னாலஜி என்னும் உணவு தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகிறது. உணவு தயாரிப்பு தொழிலகங்களில் இறுதி வடிவாகக் கிடைக்கும் உணவுகளைத் தயாரிப்பதன் ஒவ்வொரு நிலையிலும் இத் துறை தொழில்நுட்பவியலாளர்களின் பணி முக்கியமானது. உணவுப் பொருட்களின் தன்மையை சோதிப்பது, உணவு கெட்டுவிட்டதா, சத்துப் பொருட்களின் அளவு போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும் உணவுப் பொருட்களின் தர உத்தரவாதத்தை அறிவதே அவர்களின் முக்கிய பணியாகும். மூலப் பொருட்களை பரிசோதிப்பது, சத்துப் பொருட்களின் அளவை உறுதி செய்வது, சரியாகக் கையாளுவதன் மூலமாக உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவது, பாதுகாப்பது, பேக்கிங் செய்வது போன்ற பணிகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன. நுகர்வோர் கலாசாரம் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் உணவு மேம்பாடு, வாடிக்கையாளர் தேவையறிந்து அதற்கேற்ப உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனைக்கு அனுப்பும் பணிகளும் இவர்களுடையது தான். இவர்களை பொதுவாக உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பேக்கேஜிங் யூனிட்கள், மொத்த விற்பனையாளர்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், மருத்துவமனைகள் மற்றும் இதர சிற்றுண்டி நிறுவனங்கள் பணிக்கு விரும்புகின்றன. பேக்கேஜ்டு உணவுகளின் நிறம், தோற்றம், வாசனை, சத்துப் பொருட்களின் அளவுகளைப் பரிசோதிக்கும் ஆய்வுக்கூடங்களிலும் இவர்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. பொதுத் துறை நிறுவனப் பணியான புட் இன்ஸ்பெக்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளும் யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கான சுகாதார ஆலோசகர் பணிகளும் இவர்களுக்குத் தரப்படுகின்றன. இந்திய உணவுக் கழக நிறுவனமும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் பிரீலான்சிங் முறையிலும் பணி புரியலாம். துறை குறித்து எழுதவும் முடியும். சுய வேலை வாய்ப்பாக சிற்றுண்டி நிறுவனங்களை நடத்துவதும் இயலும். உணவு தயாரிப்பில் பயன்படும் ஒவ்வொரு மூலப் பொருள் குறித்த தெளிவான அனுபவ அறிவை எட்டும் நிலையில் இவர்கள் சிறிய அளவிலான உணவு உற்பத்தி, பாதுகாப்பது மற்றும் பண்படுத்தும் யூனிட்களை நிறுவமுடியும். சில ஆண்டு நிறுவன அனுபவமும் செயல் திறனும் தொழிலாளர் மேலாண்மையில் அனுபவமும் நிதியனுபவமும் பெற்றவர்கள் பிஸ்கட், பிரெட், பழரசம் மற்றும் இதர இனிப்புகளைத் தயாரிக்கும் சிறிய அளவிலான நிறுவனங்களை நிறுவலாம். இத்தகைய சிறு தொழில் செய்வோரை ஆதரிக்கும் விதமாக உணவு பண்படுத்தும் தொழிலரங்குக்கான மத்திய அமைச்சகமும் பல்வேறு நிதியுதவிகளையும் ஆலோசனைகளையும் தருவதுகுறிப்பிடத்தக்கது. சராசரி அறிவுக்கு அதிகமான புத்திசாலித்தனமும் சுகாதாரம் மற்றும் சத்துப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வும் கொண்டவர்களுக்குப் பொருத்தமான துறை இது. ஒரு நல்ல குழுவை உருவாக்கும் திறன் மற்றும் குழுவாக இணைந்து செயலாற்றும் தன்மை ஆகியவற்றைப் பெற்றிருப்பது நல்ல எதிர்காலத்தைத் தரும். இவை தவிர தகவல் பரிமாற்றம் மற்றும் நிர்வாகத் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். இத்துறையில் பி.டெக்., படிக்க விரும்புபவர்கள் பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியலை படித்திருக்க வேண்டும். எம்.எஸ்சி., புட் டெக்னாலஜி படிக்க விரும்புபவர்கள் பி.எஸ்சி., வேதியியல், இயற்பியல், கணிதம் மற்றும் உயிரியல் படிப்பு ஒன்றை முடித்திருக்க வேண்டும். பி.டெக்., முடித்தவர்களும் எம்.எஸ்சி., புட்டெக்னாலஜியைப் படிக்கலாம். இந்தப் பிரிவில் ஆய்வுப் படிப்புகளையும் மேற்கொள்ளலாம். இன்றைய நகர்ப்புற வாழ்க்கை என்பது கேன்களில் கிடைக்கும் ஜூஸ், டின் வெஜிடபிள்ஸ், உடனடி உணவு வகைகள் என்பதாக மாறியுள்ளது. எனவே உற்பத்தி மேலாளர், லேப் சூப்பர்வைசர் என புதிது புதிதான வாய்ப்புகள் உருவாகிக் கொண்டே வருகின்றன. ஆனாலும் துறையில் படிப்பு முடித்துள்ள ஒருவர் தனது சூழலுக்கேற்ப வெளியூர்களுக்குச் செல்ல தயாராக இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பெற முடிகிறது.