கல்வி அடிப்படை சட்டம்... சில யோசனைகள்
கல்வியை அடிப்படை உரிமையாக்கும் மசோதா பார்லிமென்டில் சட்டமாக்கப்பட்டு விட்டது. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு தேர்வு முறை ரத்து, அந்தந்த மாநில கல்வி வாரியங்களே தமக்கான தரத்தை முடிவு செய்வது போன்ற புரட்சிகரமான திட்டங்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சட்டம் குறித்த சில முரண்பாடுகளை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர். 1993ம் ஆண்டில் வழங்கப்பட்ட உன்னிகிருஷ்ணன் தீர்ப்பு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என கூறியது. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதில் அடங்குவர். ஆனால் தற்போதைய புதிய சட்டத்தின்படி 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவருக்கு கட்டாயக் கல்வி என்றே குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வரலாற்றுத் தவறாக அமையலாம். 1990ம் ஆண்டின் ஜோம்தின் கருத்தரங்கில் ஒரு குழந்தையின் பால்ய பருவ நடவடிக்கைகளே எதிர்கால கல்வி முறையை பெரிதும் தீர்மானிப்பதாக மத்திய அரசே ஒப்புக் கொண்டது. எனவே தற்போதைய முன்மொழிவு இதற்கு முரணாக அமைகிறது. சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னமும் 16 கோடி குழந்தைகள் போதிய சத்துணவு இல்லாமை, சுகாதாரம், இளவயதுக் கல்வி இல்லாமலிருப்பதைக் காண்கிறோம். எனவே புதிய கல்வி உரிமைச் சட்டம் எதிர்பார்க்கும் பலனைத் தருமா என்பது கேள்வியாகியிருக்கிறது. பாலின வேறுபாடுகள் அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது. இந்த புதிய அடிப்படைக் கல்வி உரிமை மசோதாவின் 3வது பகுதியின் பிரிவு 6(1)ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வந்து முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் அருகிலுள்ள பள்ளிகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைத் தர வேண்டும் என்ற அம்சம் உள்ளது. 2015ம் ஆண்டுக்குள் இலக்குகள் அடையப்பட வேண்டும் என்ற நிலையில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இச்சட்டத்தை நிறைவேற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின்படி குழந்தைகள் கல்வி பெறுவதில் பொருளாதார, சமூக, கலாசார, மொழி, ஊனம் போன்ற காரணங்கள் தடையாக இருக்கக்கூடாது என்ற அம்சம் இடம் பெற்றுள்ளது. எனினும் சமமான உள்கட்டமைப்பு குறித்து அது எதையும் கூறவில்லை. அரசு, தனியார், நிதியுதவி பெறும், பெறாத பள்ளிகள் ஆகிய அனைத்தையும் அடக்கிய பொதுவான கல்வி முறை இருந்தால் மட்டுமே சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். கேந்திரிய வித்யாலயா, மாதிரிப் பள்ளிகள், பிரதிபா வித்யாலயா, ரெசிடன்ஷியல் பள்ளிகள் போன்ற வற்றுக்கிடையே நிதி தொடர்பான முரண்பாடுகள் அதிகம் உள்ளன. இவற்றைக் களைவதுடன் அனைத்துப் பள்ளிகளுக்குமிடையே பொதுவான கல்வித் தரம் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டத்தில் குறைந்த பட்ச கல்வித் தரம் குறித்த எந்த அம்சமும் இல்லை. மாறுபட்டு வளரும் குழந்தைகள் அனைவருக்கும் ஏற்ற இலகுத் தன்மையுடனும் தரத்துடனும் கூடிய மாற்றங்களை இந்த இச்சட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களை சென்சஸ், தேர்தல், அவசரகாலப் பணிகள் ஆகியவற்றுக்கு நிர்ப்பந்திப்பதன் மூலமாக அப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது போலவே அவசர காலச் சூழல்களில் பள்ளிகளை மூடுவதும் மாணவர்களை பாதிக்கிறது. சமமான கல்வி முறையைத் தர குறைந்த பட்ச உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் மற்றும் நூலக வசதி, நிதி, பாடப்புலம், மொழி மற்றும் சமூக கலாசார விதிமுறைகள் பற்றிய எந்த அம்சமும் இந்த சட்டத்தில் இல்லை என்பது தான் இதன் பலவீனம். வகுப்பறை மற்றும் கழிப்பறை போன்றவை பற்றி இந்த மசோதா கூறினாலும் இவற்றால் கல்வித் தரம் மேம்படுவது குறித்து இது எதையும் குறிப்பிடவில்லை. 8ம் வகுப்பு வரை மாணவரை பெயிலாக்குவதை இது தடை செய்கிறது. ஆனால் ஒரு மாணவர் பெற்ற கல்வியறிவை பரிசோதிப்பது குறித்து எதையும் இது கூறவில்லை. இது போலவே குழந்தைத் தொழிலாளர் முறை பற்றியும் இது எந்த விளக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. கிராமப்புறங்களில் நிலவும் வறுமை, விவசாய நிலைமை காரணமாக குழந்தைகள் வேலைக்குச் செல்வதை யாராலும் தடுக்க முடியவில்லை. குழந்தைத் தொழிலாளர் நிலைக்குக் காரணமானவர்கள் மீதான கடுமையான தண்டனைகளை இது கொண்டிருக்கவில்லை. உடல் ஊனம் காரணமாக ஆரம்பக் கல்வியைப் பெற முடியாத குழந்தைகளுக்கு அவர்களுக்குத் தக்க சூழலில் கல்வி தரப்படும் என இந்த சட்டம் கூறுகிறது. ஆனால் அதற்கான வழிமுறைகள் எதையும் இது கூறவில்லை. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது உன்னதமான நோக்கம் தான். இது போன்ற மசோதாவும் தவிர்க்க முடியாதது தான். ஆனால் இதன் குறைகள் நீக்கப்பட்டு நிறைவேற்றப்படும் போது இதன் பயன்பாடு சிறப்பாக அமையும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பு.