வளரும் பேஷன் ஸ்டைலிங்
அழகான விஷயங்களில் ஆர்வமும், பேஷன், டிரென்ட் ஆகியவற்றை கவனிப்பவராகவும் இருப்பவர்களுக்கு, பேஷன் டிசைனிங் பொறுத்தமான துறையாக அமையும். இது தற்போது தான் அறிமுகமாகி இருந்தாலும், கவர்ச்சிகரமான துறையாக கருதப்படுகிறது. புதிதாக நுழைபவர்கள் கூட, ஒரே நிகழ்ச்சியில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். எவ்வளவு திறமை வாய்ந்தவர் என்பதை பொறுத்தே சம்பளம் அமைகிறது. பேஷன் துறையில் தற்போதைய நிறங்கள், வடிவங்கள் பற்றிய ஆழமான அறிவு அவசியம். குழுவாக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும். முக்கியமாக எந்த சூழலிலும் பணிபுரிய தயாராக இருக்க வேண்டும். பேஷனில் ஸ்டைலிங் பிரிவில் ‘நிப்ட்’, பியர்ல் அகாடமி போன்ற நிறுவனங்கள் படிப்புகளை வழங்குகின்றன. பேஷன் டிசைனிங் அண்டு இமேஜ் ஸ்டைலிங்கில் பியர்ல் அகாடமி டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது. பேஷனில், ஸ்டைலிங் பிரிவில் சாதிக்க விரும்புபவர்களுக்கான பயிற்சியை இந்த படிப்புகள் வழங்குகின்றன. மேக்கப், தலை அலங்காரம், போட்டோகிராபி மற்றும் இது தொடர்பான கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளில் உபகரணங்கள், தொழில்நுட்பங்கள், திறன்களை வளர்த்துக்கொள்வது பற்றி இதில் கற்றுத்தரப்படுகிறது. பேஷன், இவென்ட் மேனேஜ்மென்ட், விளம்பர நிறுவனங்களிலும், திரைத்துறையிலும் கூட பேஷன் ஸ்டைலிஸ்ட்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. அழகியலும், நுணுக்கமான விஷயங்களையும் கவனிக்கும் திறனும், இந்த துறையில் முன்னேற அவசியம். பேஷன் ஸ்டைலிங் பணியில் தனி முத்திரை பதிப்பவர்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. இந்த படிப்புகள் சேர பிளஸ் 2 படித்திருந்தால் போதுமானது. இந்த படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு தொடக்க சம்பளமாகவே ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது.