உன்னதமான வேளாண்மை துறை
விவசாயம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத அம்சமாகும். இந்தியாவில், விவசாயத்தை மேம்படுத்த பலவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல எதிர்மறை விளைவுகள் (பசுமை புரட்சி நடவடிக்கையால்) ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்திய விவசாய நடவடிக்கைகளில், இன்றைய நிலையில் பல அறிவியல்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றால் பல தீமைகளும் ஏற்படுகிறது(பல மேற்கத்திய கம்பெனிகளிடம் ரசாயன பூச்சி மருந்து வாங்கி பயன்படுத்துவதால்) என்று இயற்கை வேளாண் ஆய்வாளர்கள் பலர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இன்றைய நிலையில் வேளாண் துறைக்கு பல பயிற்சிபெற்ற நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், ஏற்றுமதி சந்தையில் இத்துறை அதிக லாபத்தை தரும் நிலையில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண்துறை கணிசமான அளவில் பங்காற்றுகிறது(இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகவும் குறைவுதான்). அதேபோல் கணிசமான சதவீதத்தினருக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது(கடந்த 1991 ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தாராளமய கொள்கையால், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள் மற்றும் இப்போதுவரை தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது வேதனையான உண்மை). இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில்தான்(ஐ.சி.ஆர்.ஏ), வேளாண் துறையில், ஒருங்கிணைத்தல், வழிகாட்டுதல், ஆராய்ச்சி மற்றும் கல்வியை நிர்வகித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்ளும் மிகவும் உயர்ந்த அமைப்பாகும். தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை அறிவியல் போன்ற துறைகளும் இந்த செயல்பாட்டில் அடக்கம். நாடு முழுவதும் தற்போது 97 ஐ.சி.ஆர்.ஏ. கல்வி நிறுவனங்களும், 45 விவசாய பல்கலைகளும் உள்ளன. இந்த துறையில் நுழைவது எப்படி: பள்ளி மேல்நிலைப் பாடத்தில் அறிவியல் பாடங்களை படித்த பிறகு, பி.டெக் அல்லது பி.எஸ்சி பட்டப் படிப்பில் விவசாய படிப்புகளை படிக்கலாம். பி.டெக் படிக்க, பள்ளி படிப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் படித்திருக்க வேண்டும். ஆனால் பி.எஸ்சி படிப்பிற்கு கணிதம் தேவையில்லை. ஆனால், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களோடு உயிரியலும் படித்திருக்க வேண்டும். மேலும் இத்துறையில் நீங்கள் முதுநிலை படிப்பு உள்ளிட்ட, பல மேல்படிப்புகளையும் படிக்கலாம். முதுநிலை படிப்புகளின் விவரங்கள்: விவசாயத்தில் பி.எஸ்சி படித்த பிறகு, முதுநிலை பட்டப் படிப்பில் பல பிரிவுகள் சிறப்பு படிப்புகளாக உள்ளன. பயிர்களுக்கும், சுற்றுசூழலுக்கும் இடையேயான தொடர்பை அரையும் துறை(அக்ரானமி), கால்நடை பராமரிப்பு, வேளாண் வணிகம், வேளாண் பொருளாதாரம், வேளாண் தொழில்துறை, தோட்டக்கலை, ஜெனடிக்ஸ், வேளாண் ஆராய்ச்சி, செடி வளர்ப்பு, வேளாண் சேவைகள், வேளாண் நிர்வாகம், மண் அறிவியல், இயற்கை பாதுகாப்பு, பயிரிடுதல், வேளாண் இதழியல், வேளாண் கல்வி, விதை தொழில்நுட்பம், சிறுதாவர நோய்க்குறி ஆய்வு, பூச்சியியல், நீட்டிக்கப்பட்ட கல்வி போன்றவை. இத்துறைக்கு தேவைப்படும் பண்புகள்: பனியின் தன்மையைப் பொறுத்து பண்புகள் மாறுபடும். குழுவாக பணிசெய்யும் தன்மை, நல்ல ஆரோக்கியம், சில மோசமான பருவமாற்றகளுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்மை, அழுக்கான இடங்களில் பணிபுரியக்கூடிய சகிப்புத் தன்மை, தாவரங்கள், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தோன்றக்கூடிய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை கண்டுபிடிக்கும் திறன், சிக்கலான சூழல்களை சமாளிக்கும் திறன் மற்றும் விஞ்ஞான முன்னேற்றத்தில் ஆர்வம் போன்றவை சில முக்கிய பண்புகள். அதேசமயம், நீங்கள் இத்துறையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தால், மக்களை திறமையாக கையாள தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளராக பணிபுரிந்தால், நீண்ட நேரம் ஒரு கவனத்தில் பணியாற்றக் கூடியவராகவும், சிறந்த பகுப்பாய்வு திறன் உள்ளவராகவும், அறிவியல் ஈடுபாடு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். வேளாண் பொறியாளர்: வேளாண் உற்பத்தியில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும், இயற்கை வளங்களை நிர்வகிப்பது குறித்தும் வேளாண் பொறியாளர் ஆலோசனை வழங்குவார். மேலும் இவர், தனியார் ஆலோசகர்கள், தயாரிப்பாளர்கள், அரசு துறைகள், சூழல் மற்றும் மண் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, விவசாயிகளுக்கும், நிலா உரிமையாளர்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்கள். மேலும், மின்சாரம், இயந்திரங்கள், மண் மற்றும் நீர், கட்டுமானங்கள் மற்றும் சூழல்கள், வேளாண் உற்பத்தி, உணவு மற்றும் உணவு பாதுகாப்பு, எலெக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் போன்ற பலவிதமான வேளாண் பிரிவுகளில் ஒரு வேளாண் பொறியாளருக்கு பணிகள் உண்டு. பொதுவாக, வேளாண் பொறியாளர்கள் கீழ்கண்ட பணிகளை செய்கிறார்கள். 1. நீர்ப்பாசனம், கால்வை வசதி, வெள்ளம் மற்றும் தண்ணீர் கட்டுப்பாட்டு அமைப்புகளை திட்டமிடுதல், மேற்பார்வை இடுதல் மற்றும் நிர்வகித்தல், 2. வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு சாதனங்களை வடிவமைத்தல், மேம்படுத்தல் மற்றும் தயாரிப்புகளை நிர்வகித்தல். 3. சூழ்நிலை தாக்கத்தை அளவிடுதல், 4. சிறந்த மண் பாதுகாப்பு, மண்ணில் உப்புத் தன்மையை கட்டுப்படுத்தல் ஆகியவை தொடர்பாக அறிவுரை வழங்குதல், திட்டமிடுதல் 5. அறிக்கை தயாரித்து வழங்கல், 6. கால்நடைகளையும், உணவுப் பொருட்களையும் பாதுகாப்பதற்காக பண்ணை அமைத்தல் குறித்து திட்டமிடல் மற்றும் அதன் கட்டுமானத்தை மேற்பார்வை இடுதல், 7.ராய்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வயல்கள், காடுகள், ஆராய்ச்சி நிலையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அலசி ஆராய்தல் போன்றவை அடங்கும். இப்பணிக்கு தேவையான தகுதிகள்: இயற்கை வளங்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்கும் திறன், நடைமுறையில் செயல்படும் திறன், அடையாளம் காணும் திறன், படைப்புத் திறன், சிறந்த தகவல் தொடர்பு திறன், பொறுப்புகளை ஏற்று, அதை உணர்ந்து, மேற்பார்வையாளர் இல்லாமலேயே பணியாற்றும் தன்மை போன்றவை இருக்க வேண்டும். இந்திய விவசாயம் வேகமாக அழிந்துவரும் இன்றைய சூழலில், வேளாண் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்கள், உண்மையிலேயே சூழ்நிலையை உணர்ந்து, நம் நாட்டின் தன்மையை அறிந்து, ஆட்கொல்லி பூச்சி மருந்துகளை ஒழித்து, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி, விவசாயிகளின் தற்கொலையை தடுத்து நிறுத்தி, நாட்டின் சுயநல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் சுயநல அரசியல்வாதிகளின் மூலமாக மேற்கத்திய முதலாளிகள் இந்திய விவசாயத்தை கைப்பற்ற துடிக்கும் சதியை முறியடிக்க வேண்டும்.