உடல்தகுதி பயிற்சியாளர்
உலகில் இருக்கும் ஏராளமான ஆண்களும், பெண்களும் தங்களின் உடலை கட்டுக்கோப்பாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றனர். தங்களின் உடலை கவர்ச்சியாக வைத்திருக்க பலவித பயிற்சிகளை செய்வதோடு, ஆலோசனைகளையும் நாடுகிறார்கள். இதனால், உடல்தகுதி பயிற்சியானது(Fitness Training) வேகமாக வளர்ந்துவரும் துறையாக உள்ளது. இன்றைய வாழ்க்கை முறை, அதிகரித்துவரும் சுகாதார சீர்கேடு, பணி அழுத்தம் ஆகியவை, உடலை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள தூண்டுகிறது. இதனால், யோகா பயிற்சியாளர்கள், ஏரோபிக் பயிற்சியாளர்கள் போன்ற உடல்தகுதி பயிற்சியாளர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு உடல்தகுதி பயிற்சியாளர்(Fitness Trainer) என்பவர், உடலின் அதிக எடையைக் குறைத்து, உடற்பயிற்சிகளை செய்ய ஆலோசனை வழங்குவதோடு, ஏரோபிக் பயிற்சிகளையும் வழங்குவார் என்பது பலரும் அறிந்ததாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாட்டு ஆலோசனை மற்றும் சத்துள்ள உணவுகள் பற்றிய பரிந்துரைகளையும் சிலர் வழங்குகிறார்கள். மேலும், பலவிதமான உடற்பயிற்சி கருவிகள் மற்றும் உடல்தகுதி இயந்திரங்களை பயன்படுத்துவது பற்றி செய்முறை பயிற்சிகளை அளிக்கிறார். உடற்பயிற்சி தொடர்பாக பலவித தேவைகளைக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஏற்ற பயிற்சிகளை திட்டமிடுவதும், வடிவமைப்பதும் இவரின் பணி. மேலும் தன்னிடம் பயிற்சி எடுப்பவர்களின் மாறும் நிலை குறித்து முறையான மதிப்பீடுகளை பராமரிப்பதும் இவரின் பணி. இத்தொழிலுக்கு தேவையான பண்புகள்: உடல்தகுதி பயிற்சியாளராக பணிபுரிய, அத்துறையில் தீவிரமான ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. அந்த தொழிலுக்கு ஏற்ற உடலமைப்பு, சக்தி மற்றும் ஆற்றல் ஆகியவை இருக்க வேண்டும். மேலும் தொடர்ச்சியாக பணிபுரிபவராகவும், அத்துறையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், நல்ல தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவைத்தவிர, மனித உடலியல், உணவுக் கட்டுப்பாடு, சத்துணவு போன்றவற்றைப் பற்றிய போதுமான அறிவைக் கொண்டிருக்க வேண்டும். வேலைவாய்ப்புகள்: உடற்பயிற்சி மையங்கள்(Gym), ஹெல்த் கிளப்புகள், எஸ்.பி.ஏ., பெரிய ஹோட்டல்கள், சுற்றுலா தளங்கள், சுற்றுலா கப்பல்கள் ஆகியவை, உடல்தகுதி பயிற்சியாளர்களுக்கு வழக்கமான வேலைவாய்ப்பை வழங்கும் இடங்களாகும். மேலும், தனிப்பட்ட பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகளும் ஏராளமாக உண்டு. அதேசமயம் ஒருவர் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தினால், அவர் தனது திறமைகளையும், பயிற்சி முறைகளையும் வெளிப்படுத்த முடிவதோடு, சுதந்திரமாக பணியாற்றி அதிக வருமானத்தையும் பெறலாம். பளு தூக்குதல், ஏரோபிக்ஸ், யோகா, கிக்பாக்ஸிங், கராத்தே, ஸ்பின் சைக்ளிங், பைலேட்ஸ் அல்லது டாய் சி போன்ற பல துறைகளில் ஏதேனும் ஒன்றில் சிறப்பு பயிற்சியாளராகலாம். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் மக்களுக்கு பயிற்சியை வழங்கி பிரபலமாகலாம். எங்கே படிக்கலாம்: தொழில்முறை பயிற்சியாளராக ஆவதற்கு, Reebok Instructor Certification பயிற்சியில் கலந்துகொண்டு, Reebok Certified Fitness Instructor ஆகலாம். 2.5 மாதங்கள் கொண்ட 80 மணி நேர பயிற்சியை, வருடம் 2 முறை Reebok India நடத்துகிறது. ஒரு சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக ஆவதற்கு, A-level Master Trainer தேர்வில் தேற வேண்டும். இதைப்பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள www.reebok.com என்ற இணையதளம் செல்லவும். Sports Authority of India(SAI), தனது பல கிளைகளில், விளையாட்டு தொடர்பாக, பலவிதமான பாடத்திட்டங்களை நடத்துகிறது. இதுதொடர்பான படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்: * Indira Gandhi institute of physical education and sports sciences - Delhi * Lakshmibai national college of physical education - Trivandrum * Sports Authority of India - Patiala * Sports Authority of India - Kolkatta.