வங்கிகள் இழுத்தடிப்பு : கல்விக்கடனுக்கு தவிக்கும் மாணவர்கள்
சில மாவட்டங்களில் கல்விக்கடனுக்காக ஏராளமான மாணவர்கள் காத்திருக்கின்றனர். கடன் தொகையை திரும்ப வசூலிக்க முடியுமா என்ற சந்தேகத்தில் கல்விக்கடன் வழங்க வங்கிகள் மறுக்கின்றன. மனுக்கள் கொடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இத்திட்டத்தை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பள்ளிப்படிப்புக்கு பின், பெரும்பாலான மாணவர்கள், கல்லூரி படிப்பை தொடராமல் விட்டு விடுகின்றனர். லட்சம், லட்சமாக கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில், மாணவர்கள் தங்களின் எதிர்காலத் திட்டத்துக்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்ய முடியாமல், கிடைத்த படிப்பை படிப்பதும், தொடர்ந்து படிப்பதை விட்டு விட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு, எந்த படிப்புக்கும் செல்லாமல், குறைந்த சம்பளத்தில் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.இந்நிலையை தவிர்க்கவும், கட்டணம் செலுத்த முடியாமல் எந்தவொரு மாணவரும் எந்த வகையிலும் படிப்பை பாதியில் விடக் கூடாது என்பதற்காகவும், வங்கிகளில் கல்விக்கடன் வழங்க அரசு உத்தரவிட்டது. பள்ளி படிப்பை முடித்த பின், மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் படிப்புக்கான செலவை வங்கிகளில் கடனாக பெற்று, படிப்பை தொடரவும், வேலைக்குச் சென்ற பின், வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கடனுக்கு குறிப்பிட்ட தொகை வரை, செக்யூரிட்டி (பிணை) கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது. சில வங்கிகள் பெயரளவுக்கு மட்டுமே கல்விக்கடனை வழங்குகின்றன. பெரும்பாலான வங்கிகள் விண்ணப்பங்களை கூட பெறுவதில்லை. விண்ணப்பிக்கும் மாணவர் வசிக்கும் இடம், "தங்களது வங்கி எல்லைக்குள் வருவதில்லை; குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு கடன் கொடுக்க விதிமுறைகளில் இடமில்லை; உரிய செக்யூரிட்டி இல்லை" என பல காரணங்களை வங்கிகள் கூறுகின்றன. இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி கடந்து சென்றால், பான் கார்டு வேண்டும்; தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும் எனவும் சில காரணங்கள் கூறி, கடன் வழங்குவதை தவிர்க்கின்றன. கல்விக்கடன் கேட்டு வரும் மாணவர் மற்றும் பெற்றோர்களை வங்கிக் குள் அனுமதிப்பதே இல்லை. திருப்பூரில் கடந்த மாதம் நடந்த மாதாந்திர வங்கி அலுவலர்கள் கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் 4011 பேருக்கு 16.47 கோடி ரூபாய் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சில வங்கி களில் ஏராளமான கடன் விண்ணப்பங்கள் சீண்டப்படாமல் உள்ளன. வங்கிகளில் கடன் கேட்டு சலித்து போன மாணவர்கள், தற்போது கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுக்கத் துவங்கி விட்டனர். வாரம்தோறும் நடக்கும் மக்கள் குறைகேட்பு முகாமில் சராசரியாக 25 மனுக்கள் கல்விக்கடன் கேட்டும், வங்கிகள் தங்களை உதாசீனப்படுத்துவதாக புகார் தெரிவித்தும் வருகின்றன. இம் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்தாலும், பல வங்கிகள் பொருட்படுத்துவதே இல்லை. திருப்பூரை சேர்ந்த பெற்றோர் சிலர் கூறியதாவது: தொழில் துவங்கவும், தனி நபர் கடன் வழங்கவும் காட்டும் அக்கறையை, மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் காட்டுவதில்லை. தேவையில்லாத ஆவணங்கள், விவரங்களை கேட்டு விரட்டுவதும், முதலாமாண்டுக்கு கேட்ட கடனை மூன்றாமாண்டு முடியும் வரை தராமல் இழுத்தடிப்பதுமே நடக்கிறது. கல்லூரிகளில் ஏற்படும் நெருக்கடியால் தனி நபர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி, கல்விக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எந்த சொத்து ஆவணமும் கேட்கக் கூடாது என அரசு அறிவித்தாலும், வங்கிகள் அதை மதிப்ப தில்லை. கல்விக்கடன் மறுக்கப் படுவதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது, என்றனர். வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்விக்கடன் பெறுவோர், படிப்பை முடித்து, வேலைக்குச் சென்றாலும் கடனை திரும்ப செலுத்த அக்கறை காட்டுவதில்லை. கல்விக்கடன் பெற்றவர்களில் நான்கில் ஒருவர் கூட, கடனை திரும்பச் செலுத்துவது சிரமமாக உள்ளது. கல்விக்கடன் பெறுபவர்கள், வேலைக்கு சேரும்போது, பணி அமர்த்தும் நிறுவனம் மூலம் தங்கள் சம்பளத்தில் பிடித்தம்செய்து கடனைச் செலுத்தலாம். கல்லூரிகளும், வங்கி கடன் பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்களை முறையாக வங்கிகளுக்கு தெரிவிக்கலாம். கல்விக்கடன் பெற்றுள்ளது குறித்து மாணவர்களின் சான்றிதழ்களில் பதிவு செய்தால், அதன் மூலம் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு தெரியவரும். இதன் மூலம் கல்விக்கடன் திரும்ப வசூலிப்பது வங்கிகளுக்கு எளிதாக இருக்கும். கல்விக்கடன் பெரும் மாணவியரின் கடனை, திருமணத்துக்கு பின் பெற்றோர் அல்லது கணவரில், யார் திரும்ப செலுத்துவது என்ற பிரச்னை உள்ளது. அதன் காரணமாகவே, வங்கிகள் இழுத்தடிக்கின்றன. இதுபோன்ற பிரச்னைகளுக்கு பயந்தே சில வங்கிகள் கல்விக்கடன் தருவதை தவிர்க்க முயற்சிக்கின்றன. கடனை திரும்ப செலுத்துவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படும் நிலையில், கடன் வழங்குவதை தவிர்க்கும் முயற்சியில் வங்கிகள் ஈடுபடாது, என்றார். வங்கிகள் கல்விக்கடன் வழங்க தயாராக உள்ள நிலையிலும், அவை வராக்கடனாக மாறி விடும் என்ற அச்சத்தில், எதிர்காலத்தில் தங்களுக்கு பிரச்னை வந்து விடக்கூடாது என வங்கி அலுவலர்கள் எண்ணுவதால், கடன் வழங்குவதை தவிர்க்க முயற்சிக்கின்றனர். எனவே, கடன் திரும்பச் செலுத்தப்படும் என்பதற்கான வழி முறையை ஆராய்ந்து, அதற்குரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.