முயற்சி... பயிற்சி... வளர்ச்சி...!
பெரும்பாலான மாணவ, மாணவிகள் விரும்பிய படிப்பில் சேர்க்கை பெறுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். எந்த ஒரு பிரபலமான படிப்பிலும் சேர்க்கை பெற்றுவிட்டால் மட்டும் வாய்ப்புகள் நமது கதவை தட்டிவிடாது. போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், ஒரு பட்டப்படிப்பு மட்டுமே போதுமானதும் அல்ல. விரும்பிய துறையில் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள சில முயற்சிகளும், பயிற்சிகளும் அவசியம்.ஆலோசனை அவசியம்: உங்கள் துறையில் அனுபவமிக்க 'மென்டார்'களை கண்டறிந்து, தொழில்முறை முன்னேற்றத்திற்கான மேலான ஆலோசனைகளை அவ்வப்போது பெறுங்கள்.அமைப்புகளில் இணையுங்கள்: துறை சார்ந்த புரொபஷனல் அமைப்புகளில் இணைந்து, அவர்களது பல்வேறு பயிற்சி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்குபெறுங்கள். இந்த அமைப்புகள் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், வழிகாட்டுதல்கள் மற்றும் வளர்ச்சிக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்குகின்றன. பயிற்சி மற்றும் செயல்முறை அனுபவம்: இன்டர்ன்ஷிப் பயிற்சி மற்றும் இதர திட்டங்கள் வாயிலாக செயல்முறை அனுபவத்தை பெறுங்கள். நடைமுறை அனுபவம் விலைமதிப்பற்றது மற்றும் வேலைவாய்ப்பை எளிதாக்குகிறது.திறன் மேம்பாடு: துறை சார்ந்த வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை குறித்து அறிந்துகொள்வதோடு, ஆன்லைன் படிப்புகள், 'வொர்க்ஷாப்'கள் மற்றும் குறுகியகால சான்றிதழ் படிப்புகள் வாயிலாக தொழில்நுட்ப திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ளுங்கள். போட்டிகளில் பங்களிப்பு: துறை சார்ந்த போட்டிகள், 'ஹேக்கத்தான்'கள் மற்றும் ஆராய்ச்சி திட்டங்களில் ஈடுபடுங்கள். இத்தகைய முயற்சி, சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் நடைமுறை அறிவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது.வேலை வாழ்க்கை சமநிலை: கல்வி, தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை சமநிலைப்படுத்த நேர மேலாண்மை திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். சுய பாதுகாப்பு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.உறுதியாக இருங்கள்: வாய்ப்புகளைத் தேடுவதிலும், கேள்விகளை கேட்பதிலும், உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் முனைப்புடன் இருங்கள். போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில், நம்பிக்கையும், உறுதியும் அவசியம்.நெட்வொர்க்கிங்: மாநாடுகள் மற்றும் வளர்ச்சிக்கு உதவும் நிகழ்ச்சிகளில் பங்குபெறுங்கள் மற்றும் 'லிங்கிட்இன்' போன்ற சமூக ஊடக தளங்கள் வாயிலாக தொழில்முறை நெட்வொர்க்கை உருவாக்குங்கள். வேலை வாய்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கான கதவுகளை 'நெட்வொர்க்கிங்'திறக்கும்.சவால்களை சமாளியுங்கள்: எந்த நேரத்திலும் எதிர்கொள்ள வேண்டிய நேரடி மற்றும் மறைமுக சிக்கள்களை சமாளிக்க தயாராக இருங்கள். அதைவிட முக்கியம், உங்கள் பலம் மற்றும் சாதனைகளில் கவனம் செலுத்துதல்.நீண்ட கால திட்டமிடல்: நீண்டகால பெரிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுங்கள். அதேதருணம், சிறிய சிறிய வெற்றியே நீண்டகால இலக்குகளை நோக்கி பயணிக்க ஊக்கமளிக்கும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.-சதிஷ்குமார் வெங்கடாசலம்