மாணவர்கள் திறனை மேம்படுத்த நாளிதழ் வாசிப்பு அவசியம் வேளாண் வர்த்தகமைய நிறுவனர் அறிவுரை
மதுரை: மாணவர்கள் தங்கள் திறனை வளர்க்கவும், தகவல் தொடர்பை மேம்படுத்தவும் நாளிதழ் வாசிப்பது அவசியம் என,கல்லுாரி கருத்தரங்கில் வேளாண் உணவு வர்த்தக மைய நிறுவனர் ரத்னவேலு பேசினார்.மதுரை லேடிடோக் கல்லுாரியில் தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான கண்காட்சியை ரத்னவேலு துவக்கி வைத்தார். முன்னதாக கருத்தரங்கில் அவர் பேசியதாவது: திறன் வளர்ப்பு பயிற்சியே கல்விக்கும், வேலைவாய்ப்புக்குமான பாலம்.காலச் சூழலுக்கேற்ப செயல்படுவோரையே நிறுவனங்கள் தேடுகின்றன. திறமையான தனிநபரை விட, குழுவுடன் ஒன்றி செயல்படுவதே முக்கியம். இன்றைய தலைமுறையினர் நாளிதழ் வாசிப்பதே இல்லை. மாணவர்கள் தங்கள்திறன் வளர்ப்பு, தகவல் தொடர்பை மேம்படுத்த நாளிதழ் இன்றியமையாதது.15 ஆண்டுகளுக்கு முன்பஸ்களில் முன்பதிவு வசதி கிடையாது. இப்பிரச்னை தீர்க்க உருவான ஸ்டார்ட் அப் நிறுவனம்தான் ரெட்பஸ். உணவு டெலிவரி நிறுவனங்கள் முதல் இன்போசிஸ் வரை எல்லாமே ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான்.இன்றைய காலகட்டத்தில் ஏ.ஐ., கால் பதிக்காத துறைகளே இல்லை. சமீபத்தில் பிளஸ்2 மாணவன் உருவாக்கிய ரோபோ விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்திற்கு தேவையான நீர், எந்த பகுதியில் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டும் என்ற தகவல் அளிக்கிறது.இதுபோன்ற முயற்சிகளால் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.மாக்ஸிலேட்டர் அமைப்பின் நிறுவனர் நானு சுவாமி, கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தொழிற்கல்வியின் அவசியம் பற்றி பேசினர். துணை முதல்வர் நிம்மா எலிசபத், தொழில் மேம்பாடு மைய ஒருங்கிணைப்பாளர் ஆன் நிர்மலா கார், பொறுப்பாளர் பிரியா, உதவிப் பேராசிரியர் ஜெய கோகிலா உடனிருந்தனர்.