இலவச பஸ் பாஸ் பெற்றும் பயன் இல்லை; தினம் எட்டு கி.மீ., நடக்கும் மாணவர்கள்
நரிக்குடி: நரிக்குடி தர்மம் தேளி வழியாக மானாமதுரைக்கு பள்ளி நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் இலவச பஸ் பாஸ் இருந்தும் அப்பகுதி கிராம மாணவர்கள் தினம் எட்டு கி.மீ., நடக்கும் நிலையில் உள்ளனர். மணிக்கட்டியேந்தல், மறையூர், தர்மம், தேளி, கொட்டக்காச்சியேந்தல் கிராமங்களிலிருந்து, 100 க்கு மேற்பட்ட மாணவர்கள், நரிக்குடியில் படிக்கின்றனர். இப்பகுதி கல்லூரி மாணவர்களும் நரிக்குடி வந்து, பிற நகரங்களுக்கு செல்கின்றனர். ஆனால், இவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்ல உரிய நேரத்தில் பஸ் வசதி இல்லை. மானாமதுரையிலிருந்து நரிக்குடிக்கு தேளி, தர்மம் வழியில் 6 மணிக்கே பஸ் வந்து விடுகிறது. இந்த பஸ்சில் மாணவர்கள் செல்ல முடியாது. இதே போல் மாலையில் நான்கு மணிக்கு, நரிக்குடியில் இருந்து அரசு பஸ் கிளம்பி விடுகிறது. ஆனால் , பள்ளி முடிய 4.30 மணியாகிறது. இதனால், மாணவர்கள் எட்டு கி.மீ., வரை நடக்கின்றனர். அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியும் பயனில்லை. நரிக்குடியிலிருந்து தர்மம், தேளி வழியாக மானாமதுரைக்கு 22 கி.மீ., இந்த வழித்தடத்தில் மறையூர், தர்மம், தேளி உட்பட 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வழியே 2 முறை மட்டுமே வரும் பஸ்சால், எந்த பயனுமில்லை. வேலைக்கு சென்று வருவோர், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப் படுகின்றனர். நரிக்குடியிலிருந்து தேளி வழியாக, பத்து ரூபாய் செலவில் 22 கி.மீ., தூரத்தில், மானாமதுரை செல்வதற்குப் பதில், பார்த்திபனூர் வழியாக 20 ரூபாய் செலவில், 32 கி.மீ., தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பணம் செலவாவதுடன் நேரமும் அதிகமாகிறது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மாலையில் பள்ளி நேரத்திற்கு ஏற்ப பஸ் இயக்க வேண்டும். அதே நேரத்தில் அனைவரும் பயனடையும் வகையில், நரிக்குடியிலிருந்து தேளி வழியாக மானாமதுரைக்கு, கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.