உள்ளூர் செய்திகள்

பள்ளி சீருடைக்கு மறுசுழற்சி பாலியஸ்டர் பஞ்சு துணியை திரும்ப அனுப்புவதை கண்டித்து மனு

ஈரோடு: ஈரோடு, அசோகபுரம், கைத்தறி மற்றும் துணி நுால் உதவி இயக்குனர் அலுவலகத்தில், தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோபு, செயலாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் மனு ஆளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:பள்ளி சீருடை வழங்கும் திட்டம்-2024ல், கூட்டுறவு நுாற்பாலைகளுக்கு பாலியஸ்டர் பஞ்சு சப்ளை செய்ய தனியார் நிறுவனம் முதல் ரக பாலியஸ்டர் பஞ்சுக்கு விலை பெற்று கொண்டு, மறுசுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் பஞ்சை (பல வண்ணங்களில்) வழங்கியது.அதன் மூலம் நுால் உற்பத்தி செய்து, அரசு நுால் கிடங்குக்கு அனுப்பி, நெசவாளர் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நுால் மூலம் நெசவாளர் சங்கங்கள், டிரில், கேஸ்மென்ட் துணிகளை உற்பத்தி செய்து, கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு பஞ்சாலை கழகங்களுக்கு அனுப்பியது. அதை ஆய்வு செய்த அதிகாரிகள், அத்துணியில் பட்டை வருவதாக கூறி, 13 லட்சம் மீட்டர் துணியை சங்கங்களுக்கு திரும்ப தர, கைத்தறி துறை இயக்குனர் ஆணையிட்டுள்ளார். இதனால் நெசவாளர் சங்கங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்த பாலியஸ்டர் பஞ்சை வழங்கியதுதான் உண்மையான காரணம், என ஆய்வில் தெரியவந்தது. திரும்ப தரப்பட்ட துணிகளுக்கான தொகையை, அத்தனியார் நிறுவனத்திடம் வசூலிக்க வேண்டும்.இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு இதுவரை நுால் வரவில்லை. இதற்கு மேல் நுால் வழங்கினால், 3 மாதத்துக்குள் உற்பத்தியை நிறைவு செய்ய இயலாது. எனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட விசைத்தறிகள், சைசிங் மில்களில் உற்பத்தி மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்