மாணவர்கள் மோதல் சம்பவங்களால் பெற்றோர்கள் திக் ... திக்... நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பள்ளி மாணவர்கள் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லுாரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐ.டி.ஐ.,), தனியார் ஐ.டி.ஐ., மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இயங்கி வருகிறது. இங்கு சங்கராபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.சங்கராபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிராமப்புறங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், பஸ் நிலையத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ , மாணவிகள் வெகு நேரம் பஸ்சுக்காக காத்திருக்வேண்டிய நிலை உள்ளது. .அந்த நேரத்தில் மாணவர்களுக்கு இடையே உள்ள கோஷ்டி, பைக் ரேஸ் மற்றும் சாதி பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. பின்னர் அப்பிரச்னை கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்குகிறது.பள்ளி, கல்லுாரி முடிந்து மாலை வீட்டிற்கு செல்லும் அனைத்து மாணவர்களும் சங்கராபுரம் பஸ் ஸ்டாண்டில் ஒன்று திரளுகின்றனர்.அங்கு மாணவர்கள் பலர் இரு கோஷ்டிகளாக மோதிக் கொள்கின்றனர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தாக்குதலை காணும் போது, பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள், கடை வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கடும் அதிர்ச்சியடைய செய்கிறது.நுாற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு ஆபாசமாக திட்டி, அங்கு கிடைக்கும் தடி உள்ளிட்ட பொருட்களை எடுத்து பயங்கரமாக தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.சில நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சமடைந்து அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர். இது போன்ற சம்பவம் மாணவ,மாணவிகளை படிக்க அனுப்பும் பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது.மாணவர்கள் பயங்கரமாக தாக்கி கொள்ளும் வீடியோ வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி, மாவட்டத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.கடந்த மாதம் 26ம் தேதி தனியார் ஐ.டி.ஐ., மாணவர்கள் சங்கராபுரம் பஸ் ஸ்டாண்டில் மோதிக் கொண்டனர். கடந்த மாதம் 28 ம் தேதி தேவபாண்டலம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பஸ் நிறுத்ததில் தாக்கி கொண்டனர்.தொடர்ந்து கடந்த 18ம் தேதி சங்கராபுரம் அரசு ஆண்கள் பள்ளியின் பிளஸ் 1. பிளஸ் 2 மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் இடையே ஏற்படும் பிரச்னைகள், கிராமங்கள் வரை சென்ற ஊர் பிரச்னையாகவும் மாறும் சூழல் உள்ளது.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை தடுக்கும் பொருட்டு அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுக்க வேண்டும்.பஸ் ஸ்டாண்டில் காலை, மாலை நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதுடன் நிரந்தர பாதுகாப்பிற்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.இதில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதலை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக அவல நிலை ஏற்படும்.