உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வுக்கு கையெழுத்திட்ட காந்திசெல்வன் மீது தி.மு.க., என்ன நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க., கேள்வி

மதுரை: நீட் தேர்வுக்கு விலக்கு அளித்தால்தான் கூட்டணி என பா.ஜ.,விடம் அ.தி.மு.க., சொல்ல தயாரா என முதல்வர் ஸ்டாலின் கேட்ட நிலையில், நீட் தேர்வை கொண்டு வர கையெழுத்திட்ட தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.நீட் தேர்வு தொடர வேண்டும் என்று வாதாடிய காங்., எம்.பி., சிதம்பரத்தின் மனைவி நளினியை தி.மு.க., கண்டித்ததா. 4 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இதை திசை திருப்பதான் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி பாவமன்னிப்பு கேட்பது போல தி.மு.க., செயல்பாடு உள்ளது என அ.தி.மு.க., மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றம்சாட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது:காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிஆட்சியில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத், இணை அமைச்சராக தி.மு.க.,வின் காந்திசெல்வன் இருந்தனர். 2010 டிச.,21ல் அவர்கள் கையெழுத்திட்டு மத்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது.இதை யாரும் மறுக்க முடியாது. அப்படி என்றால் நீட் தேர்வு கொண்டு வர காரணமாக இருந்த காந்தி செல்வன் மீது தி.மு.க., என்ன நடவடிக்கை எடுத்தது.நீட் தேர்வை ரத்து செய்ய 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தினார். நீட் தேர்வுக்கு ஆதரவாக சிதம்பரத்தின் மனைவி நளினி ஆஜராகி வாதாடினார். எந்த சூழ்நிலையிலும் இனி யாராலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்று பேட்டியும் கொடுத்தார். அப்போது இது குறித்து ஸ்டாலின் கண்டித்தாரா.கடந்த சட்டசபை தேர்தலில் நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்வோம். அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று ஸ்டாலினும், உதயநிதியும் பிரசாரம் செய்தார்கள். நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து இயக்கம் என்று ஒரு நாடகத்தை அரங்கேற்றி, சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டில் குப்பை தொட்டியில் வீசப்பட்டது. தி.மு.க.,வின் பொய்யான தேர்தல் வாக்குறுதியால் 21 மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். அன்றைக்கு அனிதா மரணத்தை வைத்து அரசியல் செய்த உதயநிதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்.நீட் தேர்வு ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய தி.மு.க., தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நீதிமன்றம் செல்வோம் என்று கூறுகிறார்கள். குற்றம்செய்து விட்டு அதற்கு பாவமன்னிப்பு கேட்பது போலத்தான் தி.மு.க., அரசின் செயல்பாடு உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்