அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பை நீட் தேர்வே சாத்தியமாக்கியது!
கரூர்: நீட் நுழைவு தேர்வை அமல்படுத்தியதால் தான், என் போன்ற ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க முடிந்தது என, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கரூர் அரசு மருத்துவ கல்லுாரியில் மருத்துவம் படித்து வரும், அரசு பள்ளி மாணவர்கள் கூறியதாவது:எம்.சஹானா பர்வீன், எம்.பி.பி.எஸ்.,இறுதியாண்டு மாணவி: சென்னையில், தனியார் நிறுவனத்தில் தந்தை வேலை பார்த்து வருகிறார். கடந்த, 2021ம் ஆண்டு அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்வில், 550 மதிப்பெண்களும், நீட் தேர்வில், 260 மதிப்பெண்களும் பெற்றேன். இதில், 7.5 சதவீத ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்ததால், எங்களை போன்ற அரசு பள்ளி மாணவ, மாணவியரின் டாக்டர் கனவு நிறைவேறியது. தற்போது இறுதியாண்டு படித்து வருகிறேன்.எஸ்.கோவிந்தராஜ், எம்.பி.பி.எஸ்., இறுதி யாண்டு மாணவர்: சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் அரசு பள்ளியில் படித்தேன். என் தந்தை கைத்தறி நெசவு தொழிலாளி. பிளஸ் 2 தேர்வில், 560 மதிப்பெண்களும், நீட் தேர்வில், 350 மதிப்பெண்களும் பெற்றேன்.மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் அனைத்து செலவையும் அரசே ஏற்பதால், எவ்வித சிரமமும் இல்லாமல் படித்து வருகிறோம். இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.என்.அபிநயா, எம்.பி.பி.எஸ்., மூன்றாமாண்டு மாணவி: கோவையில் வசித்து வந்தேன். தாய் டெய்லர் வேலை செய்து, என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தார். பிளஸ் 2 தேர்வில், 533 மதிப்பெண் பெற்றேன். நீட் தேர்வில், 309 மதிப்பெண் பெற்றிருந்தேன். அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ படிப்பை நீட் தேர்வும், அதனால் வழங்கப்பட்ட, 7.5 சதவீதம் ஒதுக்கீடு சாத்தியமாக்கி உள்ளது. நான் எந்த பயிற்சி மையத்திலும் சேராமல் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறேன்.வி.விஷ்ணு, எம்.பி.பி.எஸ்., மூன்றாமாண்டு மாணவர்: துாத்துக்குடி மாவட்டம், குமரெட்டியாபுரத்தை சேர்ந்த நான், எங்கள் ஊரில் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 தேர்வில், 537 மதிப்பெண், நீட் தேர்வில், 313 மதிப்பெண் பெற்றேன். தந்தை ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். நான் படிக்கும் போது, அரசு பள்ளியில் பயிற்சி மையம் சிறப்பாக இருக்கவில்லை. அதனால்தான் தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். தனியார் பயிற்சி மையத்தை போல, அரசு பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி வழங்க, அரசு முன்வர வேண்டும்.ஆர்.ரவீணா, எம்.பி.பி.எஸ்., மூன்றாமாண்டு மாணவி: சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் அரசு பள்ளியில் படித்தேன். பிளஸ் 2 தேர்வில், 531 மதிப்பெண், நீட் தேர்வில், 320 மதிப்பெண் பெற்றேன். எனது தந்தை கைத்தறி நெசவு தொழிலாளி. டாக்டர் படித்து வைக்கும் அளவிற்கு குடும்பத்தில் வசதியில்லை. எங்களை போன்ற அடித்தட்டு மக்கள் டாக்டராக நீட் தேர்வு மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியர் இடஒதுக்கீடு இல்லையென்றால் மருத்துவ படிப்பு சேர்ந்திருக்க முடியாது.டி.கோகுலதாரணி, எம்.பி.பி.எஸ்., மூன்றாமாண்டு மாணவி: ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்த நான், அங்குள்ள அரசு பள்ளியில் படித்தேன். தந்தை டிரைவர் வேலை பார்த்து, மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீட்டை அரசு கொண்டு வந்தது.அந்த ஒதுக்கீடு மூலம் எனக்கு டாக்டராக வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னை போன்ற மாணவர்களுக்கு பாகுபாடின்றி அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட சிறந்த திட்டமாகும். எதிர்காலத்தில் பல ஏழை, எளிய மாணவர்கள் டாக்டராக வருவர்.