உள்ளூர் செய்திகள்

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதி வழங்க வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்திற்கு சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்பு தேவை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைப்பதற்காகவும், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் தங்களதுபங்களிப்புகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் மூலமாகவோ அளிக்கலாம். குறிப்பாக, பெரு நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பங்களிக்கலாம். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தில், https:/nammaschool.tnschools.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக, மாநிலம் முழுவதும் உள்ள தங்களுக்கு விருப்பமான அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து, அப்பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவர்கள் பள்ளி படிப்பிற்கு பின்னர், முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்வதற்கான உதவிகளை பணமாகவோ அல்லது அவர்களின் கல்வியை ஆதரிக்கும் வகையில், மடிக்கணினி வழங்கியோ பங்களிப்பாளர்களால் நிறைவேற்ற முடியும். ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளும் அந்தந்த பள்ளியின், பள்ளி மேலாண்மை குழு மற்றும் தலைமை ஆசிரியரால் உறுதி செய்யப்பட்ட பின்னரே, NSNOP தளத்தில் பதிவேற்றப்படும்.எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் அனைவரும் சமூக பங்களிப்பு நிதி வழங்கலாம். இதுகுறித்து, பொதுமக்கள், nammaschool@tnschools.gov.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அல்லது 63853 13047 எண்ணில் பள்ளி குழுவை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்