உள்ளூர் செய்திகள்

தினமலர் அலுவலகத்திற்கு வந்ததை தாய் வீட்டுக்கு வந்தது போல உணர்கிறேன் எழுத்தாளர் ஜெயரமணி பெருமிதம்

பெங்களூரு: “தினமலர் அலுவலகத்துக்கு வந்ததை, என் தாய் வீட்டுக்கு வந்தது போல உணர்கிறேன்,” என, உணர்ச்சிப்பூர்வமாக எழுத்தாளர் ஜெயரமணி கூறினார்.பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில், 'கடல் தாமரை புத்தக பூங்கா' திறக்கப்பட்டு, இன்றுடன், 50வது நாளாகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் வாசகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அப்படி, தினமலரின் நீண்ட கால வாசகியும், தினமலரால் எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டவருமான பெங்களூரு ஹலேஹள்ளியை சேர்ந்த ஜெயரமணி, 85, நேற்று நுாலகத்துக்கு வந்தார்.ஆலமரம் அவர் தன்னிடம் இருந்த, 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை நுாலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். அலுவலகத்தின் வாயிலிலுள்ள நிறுவனர் டி.வி.ஆர்., படத்தை பார்த்ததும், தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விட்டு மரியாதை செலுத்தினார். 'இவர், ஒரு ஆலமரம். இவரிடம் இருந்து வந்த விழுதுகள் ஏராளம்' என்று பாராட்டினார்.இதையடுத்து, நுாலகத்தை பார்வையிட்டார்; சில புத்தகங்களை படித்தார்.பின், அவர் நெகிழ்ச்சியுடன் கூறியதாவது:தினமலர் நுாலகம் தொடர்பாக வரும் செய்திகளை தினமும் படிக்கிறேன். ஒவ்வொரு செய்தியும், தனி மனிதர் புகழ் பாடாமல், மனிதநேயத்தை போற்றுகிறது.இது, போற்றுதலுக்குரிய விஷயம். நுாலகம் உண்மையிலே அருமையாக இருக்கிறது. இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் என் பாராட்டுகள். நான் சிறுவயதில் இருந்தே புத்தகம் வாசிப்பேன். என் மருமகள், மகளின் பிடிவாதத்தால், 70 வயதின் துவக்கத்தில் முதன் முதலில் எழுத முற்பட்டேன். நான் எழுதுவதை யார் படிக்க போகின்றனர் என்று நினைத்தேன். ஆனாலும், தொடர்ச்சியாக கதைகள் எழுதினேன்.டி.வி.ஆர்., சிறுகதை பரிசு ஒரு கதையை தினமலரின், 'டி.வி.ஆர்., நினைவு சிறுகதை' போட்டிக்கு, 2018ல் அனுப்பினேன். 'தொழுவத்தில் அம்மா' என்ற கதைக்கு இரண்டாவது பரிசு கிடைத்து உள்ளதாக, தினமலர் அலுவலகத்தில் இருந்து கல்யாணி என்பவர் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கூறினார்.அந்த நாளை என் வாழ்வில் மறக்க மாட்டேன்; முகம் தெரியாத கல்யாணியை என்றும் மறக்க மாட்டேன்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகே, என்னை ஒரு எழுத்தாளர் என்று பலரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர், தொடர்ந்து எழுதினேன். இது வரை, ஏழு புத்தகங்களை எழுதி வெளியிட்டு உள்ளேன். தினமலர் அலுவலகத்துக்கு வந்ததை என் தாய்வீட்டுக்கு வந்தது போல உணர்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்