மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி துவக்கம்
பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.மாணவர்களின் கற்றல் திறன், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 2018ம் ஆண்டு முதல் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டுக்கான போட்டியின் துவக்க நிகழ்ச்சி, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சத்யா ஏஜன்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் ஆகிய நிறுவனங்கள் பரிசு பொருட்களை வழங்கும் பங்களிப்பாளர்களாக இணைந்துள்ளன.நேற்று நடந்த தகுதிச்சுற்றில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 1 வரை படிக்கும், 200 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் பதிலளித்தனர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.மூன்று சுற்றுகளாக நடந்த இறுதி போட்டியில், 'ஜி' அணியை சேர்ந்த மாணவர்கள் எட்டாம் வகுப்பை சேர்ந்த ராம்சரண், பிளஸ் 1 வகுப்பை சேர்ந்த கிர்த்திக் மாதேஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். இறுதி போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்களை பள்ளி முதல்வர் பிரகாஷ் வழங்கினார். ஆசிரியர் ஸ்ரீ சியாமளி போட்டியை ஒருங்கிணைத்தார்.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்துள்ள, 160க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பெறும் அணிகள், அரையிறுதிக்கு தேர்வு செய்யப்படும். அதில் இருந்து தேர்வாகும் எட்டு அணிகள் பங்கேற்கும். இறுதி போட்டிக்கு ஒரே இடத்தில் நடத்தப்படும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.சிறந்த வழிகாட்டிமாணவர் கிர்த்திக் மாதேஷ்: அறிவு தேடல் பயணத்தில் 'தினமலர் - பட்டம்' இதழ் ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது. புதிய சிந்தனைகளையும், உலகை பற்றிய புரிதலையும் வழங்குகிறது. 'பட்டம்' படிப்பதன் வாயிலாக பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும், புதிய சொற்களை கற்றுக்கொள்ளவும், பல்வேறு துறைகளில் அறிவை விரிவுப்படுத்திக்கொள்ளவும் முடிகிறது. இதில் உள்ள தகவல்கள் கேள்வி கேட்கும் திறனையும், ஆராய்ந்து அறியும் ஆர்வத்தையும் துாண்டுகின்றன. தினமும் 'பட்டம்' படிக்கும் பழக்கத்தால், தன்னம்பிக்கை பிறக்கிறது.பொதுஅறிவு பெட்டகம்மாணவர் ராம் சரண்: 'பட்டம்' இதழ் வசிப்பு கல்வி வளர்ச்சிக்கும், அறிவுத்திறன் மேம்பாட்டுக்கும் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. பாடப்புத்தகங்களில் படிக்கும் பாடங்களுடன், பல்வேறு புதிய தகவல்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது. அறிவியல், பொதுஅறிவு, வரலாறு, சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாக மாணவர்களின் வாசிப்பு திறன், சிந்திக்கும் திறன், தமிழ்மொழி திறன் மேம்படுகின்றன.வாசிப்பை ஊக்குவிக்கும் 'பட்டம்'பள்ளி முதல்வர் பிரகாஷ் கூறியதாவது:கல்வி என்பது பாட புத்தகங்களை படிப்பதோடு மட்டும் முடிவடைவதில்லை. உலகை அறிந்து கொள்ளும் புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொள்வதும், நிகழ்வுகளை பகுத்தறிந்து புரிந்து கொள்வதும், கல்வியின் முக்கியமான பகுதிகளாகும்.'தினமலர் - பட்டம்' இதழ், மாணவர்களுக்கு இத்தகைய கற்றல் வாய்ப்புகளை வழங்குகிறது. பல்வேறு துறைகள் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கிறது. கேள்வி கேட்கும் திறனும் சுயமாக கற்கும் பழக்கமும் வளர்கின்றன.பள்ளிகளில் 'பட்டம்' இதழை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது, மாணவர்களின் அறிவுத்தேடலுக்கு வலுசேர்க்கும் முயற்சியாகும். ஒவ்வொரு மாணவரும் வாசிப்பை தனது அன்றாட பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினார்.