பி.இ., - பி.டெக்., முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்: ராகிங் தடுக்க நடவடிக்கை
தமிழகம் முழுவதும், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்பில், 570 கல்லூரிகளில், 1.97 லட்சம் இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கு மொத்தம், 1.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஜூன், 17ம் தேதி துவங்கி, ஜூலை, 29ம் தேதியுடன் முடிந்த பொது கலந்தாய்வில், 1.27 லட்சம் மாணவர்கள் இட ஒதுக்கீட்டை பெற்றனர். அண்ணா பல்கலைக்கழக நான்கு கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புக்கு உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியதால், ஜூலை, 19ம் தேதியே முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள, 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், 14 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 537 சுயநிதி கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து, முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றனர். கல்லூரிகளில் மாணவர்கள், ராகிங்கில் ஈடுபடுவதைத் தடுக்க, "அனைத்து கல்லூரி வளாகத்திலும், "ராகிங்" விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும். இதில், சீனியர் மாணவர்களிடம் "ராகிங் செய்ய மாட்டோம்" என உறுதிமொழி பெற வேண்டும். சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களின் அறைக்குச் செல்ல தடை விதிக்க வேண்டும். கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும். விடுதி, கேன்டீன், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்" என அண்ணா பல்கலைக்கழகம், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, கிண்டி பொறியியல் வளாக முதல்வர் செல்லப்பன் கூறியதாவது: ராகிங்கில் ஈடுபடும் மாணவர், நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கப்படுவதோடு, 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதுகுறித்த விளம்பரம், பல்கலைக்கழக பலகையிலும், அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கல்லூரியிலும், விடுதியிலும் மாணவர்கள், "ராகிங்&'கில் ஈடுபடுவதைக் கண்காணிக்க, பேராசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், ராகிங்கில் ஈடுபடுவதைத் தடுக்க, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வரும் வகையில், பிரத்யேக கண்காணிப்பு கார் வலம் வர உள்ளது. இவ்வாறு செல்லப்பன் கூறினார்.