மாநகராட்சிப் பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் - பிரமாண்ட வெற்றி விழா
சென்னை: கோட்டூரில் உள்ள சென்னை மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் நடந்த மாணவர் தலைவர், உதவி தலைவர் தேர்தலில், 261 மாணவ, மாணவியர் ஓட்டுப் போட்டனர். வெற்றி பெற்றோருக்கு, பிரமாண்ட வெற்றி விழா, விரைவில் நடக்க உள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல்முறையாக, கோட்டூரில் உள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர் தலைவர், உதவி தலைவர் தேர்தல் நடத்தப்படுகிறது. கல்லுாரிகளில் நடைபெறும் தேர்தலை போல நடத்தப்படும் இந்த தேர்தலில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் போட்டியிடுகின்றனர். இரண்டாவது ஆண்டிற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே, போட்டியிட விரும்புவோரிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. தலைவர் தேர்தலுக்கு 9, 10ம் வகுப்புகளில் படிக்கும் நான்கு பேரும், உதவி தலைவர் தேர்தலுக்கு, 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் ஒன்பது பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒரு வாரம் நடைபெற்ற ஓட்டு சேகரிப்பு பிரசாரத்திற்கு பிறகு, நேற்று நடைபெற்ற ஓட்டு பதிவில், 261 மாணவ, மாணவியர் ஓட்டளித்தனர். இதில், 10ம் வகுப்பு மாணவி திவ்யா அதிக ஓட்டுகளை பெற்று, பள்ளியின் மாணவர் தலைவராகவும், 8ம் வகுப்பு மாணவன் பரத், உதவி தலைவராகவும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பதவியேற்பு விழா, அடுத்த வாரம் நடைபெறுகிறது.