விளையாட்டு போட்டி நடத்தும் இடத்தில் டாக்டர் குழு, ஆம்புலன்ஸ் கட்டாயம் இருக்க உத்தரவு
திருப்பூர்: உடுமலையில், பள்ளி மாணவி இறந்த சம்பவத்தை அடுத்து, விளையாட்டு போட்டி நடத்தும் இடத்தில் டாக்டர் குழு, ஆம்புலன்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உடுமலை வித்யாசாகர் கல்லூரியில், கடந்த 22ம் தேதி, குறுமைய விளையாட்டு போட்டி நடந்தது. ஜூனியர் பிரிவு பெண்கள் கபடி போட்டியின்போது, அரசு பள்ளி மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிகளில் விளையாட்டு போட்டி நடத்தும்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போதிய மருத்துவ வசதிகளை கட்டாயம் ஏற்படுத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறியதாவது: விளையாட்டு போட்டி நடத்தும் இடத்தில், அரசு டாக்டர் தலைமையிலான மருத்துவ குழு கட்டாயம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் காயம் ஏற்படும்போது, உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். போதிய மருத்துவ உபகரணங்களுடன், முதலுதவி சிகிச்சை அளிக்கும் விதமாக, தயார் நிலையில் ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும். போட்டி நடக்கும் பகுதி, மரங்கள் அற்ற மைதானமாக, போதிய நிழல் இல்லாத பட்சத்தில், ஷாமியானா பந்தல் அமைக்க வேண்டும் என பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறுமைய போட்டிகளை நடத்த, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பள்ளியிடம், பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியே, இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். ஆசிரியர்கள் கூறுகையில், "மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ், ஷாமியானா பந்தல் போன்றவற்றுக்கு, பள்ளி நிர்வாகம் முயற்சித்தாலும் போதிய ஒத்துழைப்பு கிடைக்காது. இதற்கென தனியாக செலவு செய்ய இயலாது; போட்டிக்கான நிதியையும் செலவிட முடியாது. பள்ளி கல்வித்துறையே மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும்" என்றனர்.