டில்லி பல்கலை மாணவர் சங்க தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம் என புகார்
புதுடில்லி: டில்லி பல்கலை தேர்தல் அதிகாரி எச்சரிக்கையையும் மீறி, பல்கலை வளாகம் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதேபோல, பதாகைகளும் கட்டப்பட்டுள்ளன.டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. ஏ.பி.வி.பி., எனப்படும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் மற்றும் என்.எஸ்.யூ.ஐ., எனப்படும் இந்திய தேசிய மாணவர் சங்கம் ஆகிய சங்கங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பிரசாரம் நிறைவடையும் நிலையில், சாலைகளில் துண்டுப் பிரசுரங்கள் நிறைந்து கிடக்கின்றன. சுவர்களும் போஸ்டர்களால் மறைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், டில்லி பல்கலை மாணவர் சங்கத் தேர்தலுக்கான, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபால் சிங் கூறியதாவது:அடுத்த 24 மணி நேரத்துக்குள் வேட்பாளர் பெயர் மற்றும் எண் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் பேனர்களை பல்கலை வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என நேற்று முன் தினமே எச்சரிக்கை செய்யப்பட்டது. ஆனால், வளாகம் முழுதும் போஸ்டர்கள் மற்றும் பதாகைகளால் நிரம்பியுள்ளன. தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விதிமுறையை மீறுவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் போஸ்டர் மற்றும் பேனர்களை அகற்றுகின்றனர். ஆனால், அன்று இரவே மாணவர்கள் மீண்டும் போஸ்டர்களை ஒட்டி பேனர்களை தொங்க விடுகின்றனர். நூலகங்கள் மற்றும் வகுப்பறையிலுமே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரம் செய்கின்றனர். ஏராளமான காகித விரயம் ஆகிறது.இவ்வாறு கூறினார்.