உள்ளூர் செய்திகள்

தனியார் மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை விவகாரம்; அரசு ஒதுக்கீட்டு இடம் அதிகரிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், மாணவர்களை முறைகேடாக சேர்த்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், வரும் கல்வி ஆண்டில் 95 சீட்டுகள் அரசுக்கு கூடுதலாக கிடைக்கும்.எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கு மூன்று கட்ட கலந்தாய்விற்கு பின், மாப் ஆப் கவுன்சிலிங் நடத்த வேண்டும். அதன்பிறகும் சீட் காலியாக இருந்தால், ஒரு இடத்துக்கு 10 பேர் என்ற அடிப்படையில் வெளியிடப்பட்டும் பட்டியலில் உள்ள மாணவர்களை மட்டுமே தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் நேரடியாக அழைத்து சேர்க்க வேண்டும்.ஆனால் 2017--18ம் ஆண்டு இந்த நடைமுறையை பின்பற்றாமல், தனியார் மருத்துவ கல்லுாரிகள் 95 மாணவர்களை தங்கள் இஷ்டத்திற்கு சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் கடந்த 2017-18ல் முறைகேடாக சேர்ந்த மாணவர்களை அதிரடியாக நீக்கியது.இதனை எதிர்த்து தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணை நடந்து வந்த அதே காலக்கட்டத்தில் முறைகேடாக சேர்ந்த மாணவர்கள் படித்து முடித்தனர்.அதில் ஒரு வழக்கு அண்மையில், ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியார் மருத்துவக் கல்லுாரியை கண்டித்த நீதிபதி, அக்கல்லுாரியில் 26-மாணவர்கள் படித்து விட்டதால், அக்கல்லுாரிக்கான 150 மருத்துவ இடங்களில் 26 இடங்களை ரத்து செய்வதாக அறிவித்தார்.அப்போது குறுக்கிட்ட கல்லுாரி நிர்வாகம், இடங்களை ரத்து செய்ய வேண்டாம் என கோரியது. மேலும், செய்த தவறுக்கு வரும் 2025-26 மற்றும் 2026-27 ஆண்டுகளில் தலா 13 -மருத்துவ சீட்டுகள் வீதம் அரசு இடஒதுக்கீட்டிற்கு வழங்குவதாக உறுதிமொழி அளித்தனர்.அதனையேற்ற நீதிபதி, 26 இடங்களை, புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டிற்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத் தொகையை புற்றுநோய் அறக்கட்டளை உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு இரு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டார். இந்த தீர்ப்பின் நகல் நேற்று வெளியானது.இந்த தீர்ப்பின் மூலம், மூன்று தனியார் மருத்துவ கல்லுாரிகளில் வரும் 2025-26ம் ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் கூடுதலாக 95 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பெற்றோர் சங்கம் வரவேற்புசென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறுகையில், இப்பிரச்னை குறித்து கவர்னர், முதல்வர் தலைமைச் செயலர், சென்டாக் நிர்வாகம் மற்றும் என்.எம்.சி., நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். அதனடிப்படையில், என்.எம்.சி. நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதனை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது. இதனை வரவேற்கிறோம். காலி இடங்கள் ஏற்பட்டால், அரசு அளிக்கும் பட்டியல்படி தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை ஐகோர்ட் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்