மாணவியை இறக்கி விட மறுத்த அரசு பஸ்சை மறித்த கிராம மக்கள்
கம்பம் : கோவையில் இருந்து க.புதுப்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்த மாணவியை, இறக்கி விடாமல் சென்ற அரசு பஸ்சை க.புதுப்பட்டி கிராம மக்கள் மறித்தனர்.க.புதுப்பட்டியை சேர்ந்த ஆசிரியர் மகள் கோவை கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து கம்பம் செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார்.டிக்கட் எடுக்கும் போதே கண்டக்டர், க.புதுப்பட்டியில் பஸ் நிற்காது. உத்தமபாளையம் அல்லது கம்பத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். சரி என்று கூறி பஸ்சில் பயணம் செய்துள்ளார். தேனி வந்த போது, தனது தந்தைக்கு அலைபேசியில் விபரத்தை மாணவி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைத்த மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் மாணவி வந்த பஸ்சை மறித்தனர். இதனால் தேனி - குமுளி ரோட்டில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின்பேரில் உத்தமபாளையம் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து,பஸ்சை அனுப்பி வைத்தனர்.