சர்க்கரை ஆலை பள்ளி விரைவில் மூடுவிழா; கண்டித்து விவசாயிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: மோகனுாரில் செயல்பட்டு வரும் சர்க்கரை ஆலை மெட்ரிக் பள்ளி விரைவில் மூடுவிழா காண்பதை கண்டித்து பொதுமக்கள், விவசாய முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாமக்கல் மாவட்டம், மோகனுாரில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 1978 முதல் செயல்பட்டு வருகிறது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை ஆங்கில வழியில் செயல்பட்டு வரும் இப்பள்ளியில், நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியரும் அதிகளவில் படித்து வருகின்றனர்.தற்போது, எல்.கே.ஜி., முதல், பத்தாம் வகுப்பு வரை உள்ள மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அதில், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என, 25க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த, 19ல் மாணவ, மாணவியரின் பெற்றோரை அழைத்த ஆலை நிர்வாகம், 'தமிழக அரசு பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளது. அதனால், உங்கள் குழந்தைகளை, ஜன., முதல் வேறு பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், 100க்கும் மேற்பட்டோர், சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகாவை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, நடப்பு கல்வியாண்டு முழுவதும் பள்ளி செயல்படும் என்றும், அடுத்த கல்வியாண்டில், மாற்றுப்பள்ளியில் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், மோகனுாரில் செயல்படும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன், விவசாய முன்னேற்ற கழகத்தினர், மாணவ, மாணவியரின் பெற்றோர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல ராசாமணி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.இதுகுறித்து, விவசாய முன்னேற்ற கழக நிறுவன தலைவர் செல்ல ராசாமணி கூறியதாவது: கடந்த, 48 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளியை, திடீரென மூடுவதாக அறிவித்துள்ளனர். இந்த ஆலையின் ஆண்டு வருமானம் தோராயமாக, 28 லட்சம் ரூபாய், செலவீனம், 26 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் லாபத்தில் தான் செயல்படுகிறது. அப்படி இருந்தும் மாணவர்களுடைய கல்வி மற்றும் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில், வரும், 31 முதல் மெட்ரிக் பள்ளியை மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, 2024-2025ம் கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளி செயல்படும். அதற்கு மேல் உங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுங்கள் என தெரிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இப்பள்ளியை எக்காரணத்தை கொண்டும் மூட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.