உள்ளூர் செய்திகள்

கற்போம் தமிழ்! வெளிமாநில குழந்தைகள் கணக்கெடுப்பு; ஹிந்தி ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை கல்வி வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வெளிமாநில குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஹிந்தி தெரிந்த ஆசிரியர்கள் வாயிலாக, தமிழ் மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது.தமிழகத்தில் இருக்கும் வடமாநில குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்ட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வெளி மாநிலங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட குழந்தைகளும் படித்து வருகின்றனர்.தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, காரமடை கல்வி வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் வெளிமாநில குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. காரமடை வட்டார வள மைய ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:முதல் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையில் 100 சதவீத மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பகுதிகளில் பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிந்தனர்.இதில் வெளிமாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் தான் அதிகம். அவர்களிடம் பேசி மீண்டும் குழந்தைகளை பள்ளிக்கு வர முயற்சி செய்து, பல குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வந்துள்ளனர்.அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், வெளிமாநில குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். அசாம், பீஹார், ஜார்கண்ட் குழந்தைகள் அதிகம் படிக்கின்றனர்.புதிதாக அரசு பள்ளிகளுக்கு வரும் வெளிமாநில குழந்தைகளுக்கு ஹிந்தி தெரிந்த ஆசிரியர்கள் வாயிலாக, அவர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு, தமிழ் பாடத்திட்டங்களை புரிய வைத்து, அதன் பின் ரெகுலர் வகுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றனர். பல குழந்தைகள் தமிழ் மொழியை ஆர்வமாக கற்கின்றனர். வெளிமாநில குழந்தைகளின் கல்வி எந்த விதத்திலும் தடைப்படாமல் இருக்க, தொடர்ந்து அவர்கள் படிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.ஒடிசா மாணவி அசத்தல்காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின், தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் அப்பள்ளியில் பயிலும் ஒடிசாவை பூர்வீகமாக கொண்ட மாணவி ஜான்சிராணி வெற்றி பெற்றார். இம்மாணவி ஏற்கனவே தேசிய வருவாய் வழி மற்றும் கல்வி உதவித்தொகை தேர்வு, தமிழ்நாடு ஊரக தினறாய்வு தேர்வு, தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு போன்ற தேர்வுகளிலும் வெற்றி பெற்றவர். இவரை போன்று பல வெளிமாநில குழந்தைகளுக்கு காரமடை கல்வி வட்டாரத்தில் தமிழ் வழி கல்வி ஊக்குவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்