உள்ளூர் செய்திகள்

விண்வெளி தொழிலில் என்ன உதவி தேவை? தமிழக அரசிடம் இஸ்ரோ விபரம் கேட்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலினை கடந்த வாரம், இஸ்ரோ தலைவர் நாராயணன் சந்தித்த போது, விண்வெளி தொழிலில், தமிழகத்திற்கு தேவைப்படும் உதவிகள் குறித்த விபரங்களை தெரிவித்தால், இஸ்ரோ உதவ தயாராக உள்ளது என, தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதளத்தை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைக்கிறது.அங்கிருந்து, தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளன. அதனருகில், விண்வெளி துறையை சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் விண்வெளி தொழில் நிறுவனங்களுக்கான, பொது கட்டமைப்பு வசதி ஏற்படுத்த, 100 கோடி ரூபாயை வழங்க, மத்திய அரசின், இன்ஸ்பேஸ் எனப்படும், இந்திய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் முன்வந்துள்ளது. இதற்கு தமிழக அரசு, 40 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.இந்நிலையில், இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர், சென்னையில் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.அப்போது பேசப்பட்ட விபரங்கள் குறித்து, இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறியதாவது:விண்வெளி தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தமிழக அரசு சார்பில், விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் தேவைப்படும், தொழில்நுட்ப ஆலோசனைகளை, தமிழக அரசுக்கு வழங்க இஸ்ரோ தயாராக உள்ளது.எனவே, இஸ்ரோவிடம் இருந்து, என்னென்ன உதவிகள் தேவை என்ற விபரத்தை வழங்கினால், அதற்கு தேவையானதை செய்வதாக, தமிழக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தேவைகள் தெரிந்ததும், அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்